இந்தியா

உ.பி.யை போன்று புல்டோசர் நடவடிக்கையை கையில் எடுத்த மகாராஷ்டிரா

Published On 2024-01-24 03:27 GMT   |   Update On 2024-01-24 03:32 GMT
  • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மும்பையில் ஊர்வலம் நடைபெற்றது.
  • ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது கல்வீசி தாக்கியதில் சிலர் காயம் அடைந்தனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. மதக்கலவரம், வன்முறையில் ஈடுபடும் நபர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது.

இதுகுறித்து கேள்வி எழுப்பியதும் ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள இடங்களில் வசிப்பவர்கள்தான் இதற்கு முக்கிய காரணம். இதனால் அப்பகுதிகள் இடிக்கப்படுகிறது என உத்தர பிரதேச மாநில அரசு தெரிவித்தது.

அதேபோல்தான் அரியானா மாநிலத்தில் இந்து அமைப்பினர் நடத்திய பேரணியில் கல்வீச்சு நடைபெற்றது. அப்போது கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பவர்கள் காரணம் என அரியானா அரசு புல்டோசர் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் அனைத்தையும் இடித்து தரைமட்டமாக்கியது.

பா.ஜனதா அரசு ஆட்சி செய்யும் மாநிலங்களில் புல்டோசர் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.

இந்த நிலையில்தான் ராமர் கோவில் கும்பாபிஷேகம் தினத்தை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இந்து அமைப்பினர் ஸ்ரீராம் ஷோப யாத்திரையில் ஈடுபட்டனர். ஊர்வலம் மிரா சாலை நயா நகர் பகுதியை கடந்தபோது ஒரு கும்பல் பைக் மற்றும் காரில் காவி கொடியுடன் சென்றவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் சிலர் காயம் அடைந்தனர். கல் மற்றும் கம்புகளால் கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

இந்த நிலையில் இந்த கல்வீச்சு சம்பவத்திற்கு முக்கிய காரணம் ஆக்கிரமிப்பு இடங்களில் வசித்து வருபவர்கள்தான் என அரசு சார்பில் சட்டவிரோதமான 15 இடங்களை இடித்துத் தள்ள முடிவு செய்தது. இதனால் அப்பகுதிக்கு புல்டோசர் கொண்டு வரப்பட்டது.

புல்டோசர் மூலம் சட்டவிரோத இடங்களில் கட்டப்பட்ட கட்டடங்கள் இடிக்கும் பணி தொடங்கியது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் இடித்து தள்ளப்பட்டன.

Tags:    

Similar News