இந்தியா

நட்சத்திரங்களை துரத்துவது போன்று 'ஸ்பேடெக்ஸ்' செயற்கைகோள்களின் வீடியோ காட்சி வைரல்

Published On 2025-01-01 04:57 GMT   |   Update On 2025-01-01 04:57 GMT
  • பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
  • வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

புதுடெல்லி:

விண்வெளியில் 'பாரதீய அந்தரிக்ஷா ஸ்டேசன்' இந்திய ஆய்வு மையத்தை 2035-ம் ஆண்டுக்குள் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக 'ஸ்பேடெக்ஸ்' எனும் திட்டத்தின் கீழ் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகளை இஸ்ரோ தொடங்கி உள்ளது.

இதற்காக 2 சிறிய விண்கலன்களை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. தலா 220 கிலோ எடை கொண்ட இந்த 2 விண்கலன்களையும் சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ராக்கெட் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் 'ஸ்பேடெக்ஸ்' விண்கலன்கள் பூமியில் இருந்து 470 கிலோ மீட்டர் தொலைவில் வெவ்வேறு சுற்று வட்ட பாதைகளில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சுற்று வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணி விரைவில் நடைபெறும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் வெற்றி பெற்றால் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் சாதனையை படைத்த 4-வது நாடு இந்தியா என்ற பெருமையை பெறும்.

இந்நிலையில் இஸ்ரோவின் 'ஸ்பேடெக்ஸ்' செயற்கைகோள்கள் விண்ணில் பாய்ந்த போது நட்சத்திரங்களை துரத்தி செல்வது போன்று பரபரப்பான வீடியோ காட்சிகள் நேற்று மாலை தென் அமெரிக்க கண்காணிப்பு தளத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.



Tags:    

Similar News