இந்தியா

முதல்-மந்திரி ராஜினாமா: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலாகுமா?- கவர்னர் டெல்லி விரைகிறார்

Published On 2025-02-10 11:01 IST   |   Update On 2025-02-10 11:01:00 IST
  • சட்டசபை கூட்டத்தொடர் ரத்து.
  • மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி கொண்டுவரப்படலாம் என்று தெரிகிறது.

இம்பால்:

மணிப்பூர் மாநிலத்தில் பிரேன்சிங் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.

அங்கு கடந்த 2023 மே மாதத்தில் இருந்து மைதி மற்றும் குகி இன மக்கள் இடையே வன்முறை ஏற்பட்டது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.60 ஆயிரத்துக்கும் மேலானவர்கள் தங்களது வீடுகளை விட்டு இடம் பெயர்ந்தனர். அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

குகி-மைதி இன மக்கள் இடையேயான கலவரத்தை முதல்-மந்திரி பிரேன்சிங் தூண்டியதாக குகி இனத்தவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவர் பேசிய ஒரு ஆடியோவும் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கில் பிரேன்சிங்கின் குரல் பதிவை மத்திய அரசின் தடய அறிவியல் சோதனை மையம் ஆய்வு செய்து, அறிக்கையை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன்சிங் நேற்று மாலை பதவியை ராஜினாமா செய்தார். சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்க இருந்த நிலையில் அவர் பதவி விலகியது மணிப்பூர் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள், மாநில பா.ஜ.க. தலைவர் ஏ.ஷர்தா ஆகியோருடன் கவர்னர் அஜய் குமார் பல்லாவை சந்தித்து பிரேன் சிங் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். புதிய முதல்-மந்திரி பதவி ஏற்கும் வரை பொறுப்பு முதல்-மந்திரியாக நீடிக்குமாறு அவரிடம் கவர்னர் கேட்டுக் கொண்டார்.

இன்று தொடங்க இருந்த சட்டசபை கூட்டத்தொடரில் பா.ஜ.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது.

பிரேன் சிங் தலைமையின் மீது பா.ஜ.க. கூட்டணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர் அதிருப்தியில் இருந்த தாகவும் கூறப்பட்டது.காங்கிரஸ் நம்பிக் கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏக்களே அதற்கு ஆதரித்து வாக்களிப்பார்கள் என்ற சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாகவே பதவியை ராஜினாமா செய்ய அவர் முடிவு எடுத்தார்.

பிரேன்சிங் கடந்த 3 நாட்களாக டெல்லியில் முகாமிட்டு மத்திய உள்துறை மந்திரிகள் அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மணிப்பூர் திரும்பியதுமே அவர் ராஜினாமா செய்தார்.

மணிப்பூர் முதல்-மந்திரி பதவியை பிரேன் சிங் ராஜினாமா செய்துள்ளதால் இன்று நடைபெற இருந்த சட்டசபை கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாக கவர்னர் அஜய்குமார் பல்லா அறிவித்துள்ளார்.

இந்திய அரசிய லமைப்பின் பிரிவு 174-ன் பிரிவு (1) -ல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன் படுத்தி, 12-வது மணிப்பூர் சட்டசபையின் 7-வது கூட்டத்தொடரை கூட்டுவதற்கான முந்தைய உத்தரவு இன்னும் தொடங்கப்படாத நிலையில், உடனடியாக செல்லாது என்று இதன் மூலம் அறிவிக்கிறேன்" என்று அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டுவரப்படலாம் என்று தெரிகிறது.

அங்கு அனைத்துகளும் அரசி யல் மாற்று வழிகள் ஆய்வு செய்யப்படும். புதிய முதல்-மந்திரிக்கு உரிமை கோர போதுமான அளவு பா.ஜனதாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அதன் பிறகும் புதிய அரசு அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்படாவிட்டால் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே மணிப்பூர் கவர்னர் அஜய் குமார் பல்லா டெல்லிக்கு அவசர மாக செல்கிறார். மத்திய அரசின் அழைப்பின் பேரில் அவர் டெல்லி செல்கிறார். மணிப்பூரில் சட்டசபை பதவிகாலம் 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவடைகிறது.

இதற்கிடையே பிரேன்சிங் விலகலால் மணிப்பூரில் மைதி- குகி இன மக்களிடையே அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும் என்று மத்திய அரசு நம்பிக்கையுடன் இருக்கிறது.

Tags:    

Similar News