இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோவிலில் படி பூஜை நடந்தபோது எடுத்த படம்.

சபரிமலையில் நெய் அபிஷேக வழிபாடு நிறைவு: நாளை வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

Published On 2024-01-19 04:56 GMT   |   Update On 2024-01-19 04:56 GMT
  • கடந்த 15-ந்தேதி மகரவிளக்கு வழிபாடு நடைபெற்றது.
  • மகரவிளக்கு காலம் முடிவடைவதை தொடர்ந்து நாளை (20-ந்தேதி) இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சபரிமலை வந்தனர். ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் பதிவு செய்த பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

41 நாட்கள் நடைபெற்ற வழிபாடுகளுக்கு பிறகு கடந்த மாதம் 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. பின்னர் நடை அடைக்கப்பட்டு மகர விளக்கு பூஜைக்காக கடந்த 30-ந்தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டது. இந்த கால கட்டத்திலும் திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர். இதனால் அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

கடந்த 15-ந்தேதி மகரவிளக்கு வழிபாடு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் பெற்றனர். தொடர்ந்து சபரிமலையில் சிறப்பு படிபூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதிலும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை (20-ந்தேதி)யுடன் மகரவிளக்கு காலம் நிறைவடைய உள்ளது. இதனை முன்னிட்டு இன்று காலை கோவிலில் கடைசி நாள் நெய்யபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இன்று இரவு அத்தாள பூஜை நடக்கிறது. அதன்பிறகு மாளிகப்புரம் மணிமண்டபத்தில் இருந்து ஐயப்பசாமி ஊர்வலம் சரம்குத்தி வரை சென்று விட்டு மீண்டும் சன்னிதானம் வந்து சேரும். மகரவிளக்கு காலம் முடிவடைவதை தொடர்ந்து நாளை (20-ந்தேதி) இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு அரிவராசனம் பாடப்பட்டு நடை அடைக்கப்படும். தொடர்ந்து மாளிகப்புரம் கோவிலில் குருதி சடங்குகள் நடைபெறும்.

மறுநாள் (21-ந்தேதி) காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட உள்ளன. அதன்பிறகு திருவாபரண ஊர்வலம் பந்தளத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தொடர்ந்து காலை 6 மணிக்கு சபரிமலை கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்னர் சபரிமலை மேல்சாந்தி, பந்தளம் மன்னர் பிரதிநிதியிடம் கோவில் சாவியை ஒப்படைப்பார். இத்துடன் மண்டல, மகர விளக்கு காலம் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து மாசி மாத பூஜைகளுக்காக அடுத்த மாதம் (பிப்ரவரி) 13-ந்தேதி கோவில் நடை திறக்கப்படும்.

Tags:    

Similar News