பயிற்சி டாக்டர் கொலையால் மாணவர்கள் போராட்டம்: மறைக்க எதுவும் இல்லை என்கிறார் மம்தா பானர்ஜி
- பயிற்சி டாக்டர் கொலை செய்யப்படுவதற்கு முன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
- சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம்.
மேற்கு வங்காளம் கொல்கத்தாவில் உளள் ஆர்.ஜி. கார் மெடிக்கல் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வந்த மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்டார். கொலைக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு நீதி கேட்டு மாணவர்கள் பேராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும் சிபிஐ விசாரணை வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். அவரது பெற்றோர் சிபிஐ விசாரணை கோரினால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பயிற்சி டாக்டர் கொலையில் மறைக்க ஏதும் இல்லை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:-
இந்த வழக்கில் நாங்கள் எதையும் மறைக்கவில்லை. இந்த விசயத்தில் கைது செய்யப்பட்ட நபர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். நாங்கள் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கேட்போம். ஆனால் போராடும் மாணவர்கள் வேறு அமைப்புகளின் விசாரணை வேண்டும் என்று விரும்பினால், நாங்கள் அதற்கு எதிராக இருக்கமாட்டோம். சிபிஐ விசாரணை வேண்டும் என்றால் அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் எதையும் மறைக்கவில்லை.
இதுபோன்ற சம்பவத்தை தடுப்பதில் மருத்துவ நிர்வாகம் குறைபாடாக இருந்ததாக என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். சிசிடிவி கேமரா இருக்கும்போது இந்த சம்பவம் மருத்துவமனைக்குள்ளே எப்படி நடந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள மாநில அரசால் நடத்தப்படும் இந்த கல்லூரியில் முதுநிலை 2-வது வருட மருத்துவ மாணவி கடந்த வியாழக்கிழமை (நேற்று முன்தினம்) இரவு உணவு சாப்பிட்ட பிறகு, செமினார் ஹாலுக்கு சென்றுள்ளார். 3-வது மாடியில் உள்ள செமினால் ஹாலில் அடுத்த நாள் காலை பிணமாக கிடந்தது தெரியவந்தது. 31 வயதான அந்த பயிற்சி டாக்டர் மருத்துவ பரிசோதனையில் கொலை செய்யப்படுவதற்கு முன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் மாணவர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.