அதிகரித்த மாணவர்களின் தற்கொலைகள்: தேர்வு முறையை சீர்திருத்த வேண்டும்- திரிணாமுல் எம்பி கோரிக்கை
- 2022ல் 1,123 மாணவர்கள் தேர்வில் தேல்வி அடைந்ததால் தற்கொலை
- 2022ல் 1,445 இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தற்கொலை
மாணவர்களிடையே அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்கள் குறித்தும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மௌசம் நூர் பாராளுமன்றத்தில் இன்று பேசினார்.
பாராளுமன்றத்தில் பேசிய அவர், "தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 8% பேர் மாணவர்கள் என்றும் இது ஒரு வருடத்தில் 30,000 க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்ததற்கு சமம். இந்த விவாகரத்திற்கு நாம் உடனடி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தற்கொலை செய்து கொள்பவர்களின் 35% பேர் 18-30 வயதுக்குட்பட்டவர்களாய் இருக்கிறார்கள். இது மாணவர் சேர்க்கை மற்றும் தேர்வு முறையின் அப்பட்டமான தோல்வியாகும்.
2022 ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 1,123 மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர். அதே சமயம் 1,445 இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தற்கொலை செய்து உயிரை இழந்துள்ளனர்.
இந்தாண்டு 1.8 லட்சம் மருத்துவ இடங்களுக்காக இளங்கலை நீட் தேர்வை 23 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர்.
அதேபோல் வெறும் 39,767 பொறியியல் இடங்களுக்காக JEE மெயின்ஸ் தேர்வை 12.3 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.
இந்த ஏற்றத்தாழ்வு தான் மாணவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. மாணவர்களின் மதிப்பு தேர்வு முடிவுகளுடன் தவறாக இணைத்து பார்க்கப்படுகிறது.
மிகைப்படுத்தப்பட்ட ஊடக விளம்பரம், சமூக ரீதியிலான அவமானம், கல்வி ஆலோசனை வழங்கப்படுவதில் உள்ள போதாமை மற்றும் வாலைவாய்ப்பின்மை ஆகியவை மாணவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளன.
இந்த ஆண்டு நடைபெற்ற இளங்கலை நீட், முதுகலை நீட், யுஜிசி நெட், சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுக்கு தயாராகி வந்த லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கவலைக்கிடமாக உள்ளது.
நமது நாட்டின் கல்வி நிலை ஒரு மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாணவர்களின் தற்கொலையும் தேசியளவிலான சோகமாகும். இளைஞர்களை அரசு ஆதரிக்க தவறியதை இது அப்பட்டமாக பிரதிபலிக்கிறது.
எனவே, நாட்டின் மாணவர் சேர்க்கை மற்றும் தேர்வு முறையை சீர்திருத்த உறுதியான நடவடிக்கைகளை அரசாங்கம் அவசரமாக மேற்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.