மர்மமாக இறந்த பிரபல நடிகை சோனாலிக்கு ரூ.110 கோடி சொத்து
- கோவாவுக்கு சுற்றுலா சென்றபோது சோனாலி போகட் மர்மமாக மரணம் அடைந்தார்.
- போதை பொருள் வியாபாரி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அரியானாவை சேர்ந்த நடிகையும், பா.ஜனதா பிரமுகருமான சோனாலி போகட் சமீபத்தில் கோவாவுக்கு சுற்றுலா சென்றபோது மர்மமாக மரணம் அடைந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்ததால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகம் கிளப்பினர்.
சோனாலிக்கு அவரது உதவியாளர் சுதீர் சங்வான் போதை மருந்து கலந்த உணவை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டார் என்றும், இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளது என்றும் போலீசில் புகார் அளித்தனர். சோனாலியின் சொத்துக்களை அபகரிக்க இந்த கொலை நடந்துள்ளது என்றும் குற்றம் சாட்டினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் போதை பொருள் வியாபாரி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் மர்மமாக இறந்த சோனாலி ரூ.110 கோடி சொத்துக்களின் உரிமையாளர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு ரூ.96 கோடி பதிப்பில் பண்ணை வீட்டுடன் பல ஏக்கர் நிலம் உள்ளது. சாந்த் நகரில் ரூ.3 கோடி மதிப்புள்ள வீடுகள் கடைகள் உள்ளன. ரூ.6 கோடி மதிப்பில் ரிசார்ட்டும் இருப்பதாக கூறப்படுகிறது.