சிறுவனுக்கு முதலுதவி அளித்து காப்பாற்றிய பெண் டாக்டர்: சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுகள்
- டாக்டர் ரவளி சிறுவனின் மார்பில் கையை வைத்து அழுத்தினார்.
- முதலுதவி சிகிச்சைக்கு பிறகு சிறுவன் உடலில் அசைவு ஏற்பட்டது.
திருப்பதி, மே.18-
ஆந்திர மாநிலம் விஜயவாடா அய்யப்ப நகரை சேர்ந்தவர் சாய் (வயது 6) கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கி சிறுவன் மயங்கி விழுந்தான்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவனை தோளில் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடிக்கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மகப்பேறு பெண் டாக்டர் நன்னப்பனேனி ரவளி என்பவர் வந்தார்.
அவர் பெற்றோர் குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டு பதறியடித்து ஓடுவதை கண்டு திடுக்கிட்டு என்ன நடந்தது என்று கேட்டார். பெற்றோர் நடந்த விஷயத்தை கூறினர்.
உடனடியாக டாக்டர் சிறுவனை பரிசோதித்தார். அப்போது இதயத் துடிப்பு நின்றிருந்தது.
சாலையிலேயே படுக்க வைத்து அதன் பிறகு சி.பி.ஆர். என அழைக்கப்படும் முதலுதவி செய்ய ஆரம்பித்தார். ஒருபுறம் டாக்டர் ரவளி சிறுவனின் மார்பில் கையை வைத்து அழுத்தினார். அங்கிருந்து மற்றொரு நபரிடம் வாயில் காற்று வீசுமாறு கூறினார்.
அவ்வாறு 7 நிமிடங்களுக்கு மேல் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு சிறுவன் உடலில் அசைவு ஏற்பட்டது. உடனடியாக சிறுவனை பைக்கில் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு சென்றதும் சிகிச்சைக்கு பின் சிறுவன் பூரண குணமடைந்தான்.
சாலையில் வைத்து சிறுவனுக்கு டாக்டர் சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
இது குறித்து டாக்டர் ரவளி கூறுகையில்:-
நான் மூத்த டாக்டர் ஒருவரை வீட்டில் இறக்கிவிட்டு மருத்துவமனைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தேன்.
அப்போது சிறுவனை அவருடைய தந்தை கண்ணீர் விட்டு அழுதபடி தூக்கி சென்ற காட்சியை பார்த்தேன். உடனே வாகனத்தை நிறுத்திவிட்டு அவரிடம் நடந்ததை கேட்டறிந்தேன்.
சிறுவனை பரிசோதித்ததில் அவருக்கு சிபிஆர் முதலுதவி அவசியம் என்பதை உணர்ந்து முயற்சி செய்தேன். நல்ல பலன் கிடைத்தது.
சிறுவனின் உயிரை காப்பாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சிபிஆர் முதலுதவி செய்வதை அனைவரும் கற்றுக் கொண்டால் பல விலை மதிப்பு மிக்க உயிர்களை காப்பாற்றி விடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.