குஜராத் கனமழை எதிரொலி: பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு
- அரபிக்கடலில் உருவான புயலுக்கு அஸ்னா என பாகிஸ்தான் பெயரிட்டது.
- குஜராத் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்தது.
அகமதாபாத்:
குஜராத்தின் கட்ச் அருகே அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக குஜராத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்த கனமழையில் சிக்கி 29 பேர் பலியாகினர். வெள்ளத்தில் சிக்கிய சுமார் 1,200 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். தாழ்வான பகுதிகளில் இருந்து சுமார் 20,000 பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
இதற்கிடையே, அரபிக்கடலில் உருவான புயலுக்கு அஸ்னா என பாகிஸ்தான் பெயரிட்டது. இதையடுத்து குஜராத்தில் தீவிர முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குடிசைகள் மற்றும் பலவீனமான கட்டிடங்களில் வசிக்கும் மக்கள் அருகில் உள்ள பள்ளிகள், கோவில்கள் மற்றும் பிற கட்டிடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல் மந்திரி பூபேந்திர படேலும் ஆய்வு செய்தார்.
இந்நிலையில், குஜராத்தில் பெய்த கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. இதில் மின்னல் தாக்கியும், சுவர் இடிந்து விழுந்தும், வெள்ளத்தில் மூழ்கியும் பலியாகினர்.
வெள்ளத்தில் இருந்து சுமார் 37 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என பேரிடர் மீட்புக்குழு தெரிவித்துள்ளது.