ஓசூரில் கொட்டித் தீர்த்த கனமழை: வாகன ஓட்டிகள் அவதி
- சுமார் 1 மணி நேரம் கன மழை பெய்தது.
- வாகன ஒட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் பொது மக்களை வாட்டி வதைத்தது. பகல் நேரங்களில் கடும் அனல் காற்று வீசியதால் மக்கள் சாலைகளில் நடமாடவே அச்சமடைந்தனர்.
கடும் வெயில் காரணமாக பகலில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.
இந்த நிலையில், நேற்று காலை முதல் வானம் மப்பும், மந்தாரமாக காணப் பட்டு மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டது. இதனை தொடர்ந்து மாலையில் மழை லேசாக தூறத் தொடங்கியது. பின்னர் திடீரென மழை பொழியத் தொடங்கியது.
நேரம் செல்லச் செல்ல மழையின் வேகம் அதிகரித்து சுமார் 1 மணி நேரம் கன மழை பெய்தது. பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும், ஓசூர் பஸ்நிலையம், ஜி.ஆர்.டி. சர்க்கிள், பாகலூர் ரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனி பஸ் ஸ்டாப், ராயக்கோட்டை ரோடு சர்க்கிள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றதால், வாகன ஒட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
மேலும் இந்த பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
இந்த நிலையில், கனமழை பெய்ததையடுத்து வெப்பம் குறைந்து, குளிர்ந்த காற்று வீசியதால்மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.