கவர்ச்சி பாடல்களில் பெண்களை இழிவுபடுத்துவதா?- தெலுங்கு சினிமாவுக்கு மகளிர் ஆணையம் எச்சரிக்கை
- திரைப்படங்களில் பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக அருவருப்பாக காட்டுவது சரியல்ல.
- தெலுங்கு திரையுலகில் இயக்குனர்கள், பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இந்த விஷயத்தில் பொறுப்புடன் இருக்க வேண்டும்.
தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை, 'ஐட்டம் சாங்' எனப்படும் கவர்ச்சி குத்தாட்ட பாடல் படங்களில் தற்போது கட்டாயம் இடம்பெற்று வருகிறது. இதற்கு பெரிய சம்பளத்தில் முன்னணி நடிகைகளும் குத்தாட்டம் போட்டு வருகிறார்கள். 'ரங்கஸ்தலம்' படத்தில் பூஜா ஹெக்டே ஆடிய 'ஜிகிலு ராணி...', 'புஷ்பா' படத்தில் சமந்தா ஆடிய 'ஓ சொல்றியா மாமா...', 'புஷ்பா-2' படத்தில் ஸ்ரீலீலா ஆடிய 'சப்புனு அரைவேண்டா...', 'டாக்கு மகாராஜ்' படத்தில் ஊர்வசி ரவுத்தேலா ஆடிய 'தபிடி திபிடி...' போன்ற பல பாடல்களை உதாரணமாக சொல்லலாம்.
சமீபத்தில் 'ராபின்ஹூட்' படத்தில் 'அதி தான் சர்ப்பிரைஸ்...' பாட்டுக்கு கெட்டிகா ஷர்மா போட்ட ஆட்டம் அனைவரையுமே திரும்பி பார்க்க வைத்தது. மந்திரித்து விட்ட கோழிபோல் இளைய தலைமுறை ரசிகர்கள் அந்த பாட்டை 'ரிப்பீட்' மோடில் பார்த்து வருகின்றனர்.
இப்படி படுகவர்ச்சி நடனத்தால் தெலுங்கு திரையுலகம் வசூலை வாரி குவித்து வந்த நிலையில், அதற்கு தெலுங்கானா மாநில மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'திரைப்படங்களில் பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக அருவருப்பாக காட்டுவது சரியல்ல. தெலுங்கு திரையுலகில் இயக்குனர்கள், பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இந்த விஷயத்தில் பொறுப்புடன் இருக்க வேண்டும். அதையும் மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.