மாணவர்கள் தற்கொலையைத் தடுக்க தேசிய அளவிலான செயற்குழு உருவாக்கம் - உச்சநீதிமன்றம் அதிரடி
- டெல்லி ஐஐடியில் பயின்ற மாணவர்கள் இருவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டனர்.
- கடந்த இரண்டு மாதங்களில், கல்லூரி விடுதிகளில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக அதிக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
நாட்டில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மைய விடுதிகளில் மாணவர்களின் தற்கொலை வழக்குகள் அதிகரித்து வருவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
டெல்லி ஐஐடியில் பயின்ற மாணவர்கள் இருவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டனர். தங்கள் பிள்ளைகள் சாதிரீதியான பாகுபாடு காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர் குற்றம்சாட்டனர். ஆனால் இதுகுறித்த புகாரை காவல்துறை எடுத்துக்கொள்ள மறுப்பதால் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பெற்றோர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் ஜே. பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், கடந்த இரண்டு மாதங்களில், கல்லூரி விடுதிகளில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக அதிக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைகான் காரணம் குறித்து நாம் விவாதிக்க வேண்டும்.
பாகுபாடு, ராகிங் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் காரணமாக பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். கல்வி நிறுவன வளாகத்துக்குள் தற்கொலை உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் தரப்பிலிருந்து உரிய அதிகாரிகளால் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்படுவதை உறுதி செய்வது கட்டாயக் கடமையாகும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, முன்னாள் நீதிபதி எஸ். ரவீந்திர பட் தலைமையில் 9 பேர் அடங்கிய தேசிய அளவிலான செயற்குழு அமைக்கப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். ஒரு மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், உயர்கல்வி, சமூக நீதி மற்றும் சட்ட விவகாரங்கள் துறையின் செயலாளர்கள் அதன் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான முக்கிய காரணங்களைக் கண்டறிந்து, தற்போதுள்ள விதிமுறைகளை பகுப்பாய்வு செய்து, பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய விரிவான அறிக்கையை செயற்குழு தயாரிக்கும் என்று தெரிவித்தனர்.
மேலும், தனது அறிக்கையைத் தயாரிக்கும் பணியில், எந்தவொரு உயர்கல்வி நிறுவனத்திலும் திடீர் ஆய்வு நடத்த செயற்குழுவுக்கு அதிகாரம் உண்டு. இந்தப் செயற்குழு நான்கு மாதங்களுக்குள் இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பிக்கும். அதே நேரத்தில் இறுதி அறிக்கை எட்டு மாதங்களுக்குள் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.