பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், பென்ஷன் உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு!
- 1954-ன் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- எம்.பி.க்களின் தினசரி கொடுப்பனவு ரூ.2000 இல் இருந்து ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடருக்கு மத்தியில், மத்திய அரசு எம்.பி.க்களின் சம்பளம் மற்றும் படிகளை உயர்த்தியுள்ளது.
இதனுடன், முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் (ALLOWANCE) மற்றும் ஓய்வூதியச் சட்டம், 1954-ன் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற விவகார அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையின்படி எம்.பி.க்களின் சம்பளம் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1 லட்சத்து 24 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், எம்.பி.க்களின் தினசரி கொடுப்பனவு ரூ.2000 இல் இருந்து ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியம் ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.31 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஒவ்வொரு வருடத்திற்கும் கூடுதல் ஓய்வூதியம் ரூ.2,000 லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.