இந்தியா
குணால் கம்ரா விவகாரம்: தாக்கப்பட்ட ஸ்டூடியோவை இடித்துத் தள்ளிய மாநகராட்சி அதிகாரிகள்

குணால் கம்ரா விவகாரம்: தாக்கப்பட்ட ஸ்டூடியோவை இடித்துத் தள்ளிய மாநகராட்சி அதிகாரிகள்

Published On 2025-03-25 08:01 IST   |   Update On 2025-03-25 08:01:00 IST
  • கேலி பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
  • துணை முதல்-மந்திரி ஷிண்டேவை கேலி செய்து பாடிய குணால் கம்ரா மீது மும்பை கார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மும்பை:

பிரபல 'ஸ்டாண்டு அப்' காமெடியன் குணால் கம்ராவின் நகைச்சுவை நிகழ்ச்சி மும்பை கார் பகுதியில் உள்ள ஓட்டல் வளாகத்தில் உள்ள ஹபிடட் காமெடி கிளப் ஸ்டூடியோவில் நடந்தது. அப்போது அவர், மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே 2022-ம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்தது தொடர்பாக கேலி பாடலை பாடினார். 'தில் தோக் பாகல் ஹே' படத்தில் இடம்பெற்று இருந்த பாடலை டப்பிங் செய்து கேலி பாடலை உருவாக்கி இருந்தார்.

அந்த பாடலில் அவர் ஏக்நாத் ஷிண்டேயை கத்தார் (துரோகி) என குறிப்பிட்டு இருந்தார். அவரது கேலி பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதனால் கொந்தளித்த சிவசேனா தொண்டர்கள் சுமார் 40 பேர் நேற்று முன்தினம் இரவு நகைச்சுவை நிகழ்ச்சி நடந்த ஹபிடட் காமெடி கிளப் ஸ்டூடியோ அரங்கிற்குள் நுழைந்தனர். பின்னர் அவர்கள் அங்கு இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதுதொடர்பான புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 11 பேரை கைது செய்தனர்.



இதேபோல துணை முதல்-மந்திரி ஷிண்டேவை கேலி செய்து பாடிய குணால் கம்ரா மீது மும்பை கார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், பிரிஹன் மும்பை மாநகராட்சி ஊழியர்கள் ஹபிடட் ஸ்டுடியோவின் ஒரு பகுதியை நேற்று இடித்துத் தள்ளினர். விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகக் கூறிய அவர்கள், அது பற்றிய விவரங்களை வெளியிடவில்லை. எனினும், இரண்டு ஓட்டல்களுக்கு நடுவே உள்ள இடத்தை ஆக்கிரமித்து இந்த ஸ்டுடியோ கட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக ஹபிடட் ஸ்டுடியோ நிர்வாகம் சார்பில் நேற்று காலையில் வெளியிட்ட அறிக்கையில், "குணால் கம்ரா விவகாரத்தால் ஸ்டுடியோ தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கலைஞர்களின் கருத்துக்கு அவர்கள்தான் முழு பொறுப்பு. இதில் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், எங்கள் ஸ்டுடியோ மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. எனினும், கம்ராவின் கருத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்" என கூறப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் நேற்று மகாராஷ்டிரா சட்டசபையிலும் புயலை கிளப்பியது. காமெடியன் குணால் கம்ரா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கை முன் சென்று போராட்டம் நடத்தினர். இதனால் சட்டசபை நிகழ்வுகள் 15 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News