அவுரங்கசீப் கல்லறை விவகாரத்தில் பதற்றம்: சம்பாஜிநகரில் 144 தடை உத்தரவு
- குல்தாபாத்தில் ஔரங்கசீப்பின் கல்லறைக்கு போலீஸ் காவல் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
- அடுத்த சில நாட்களில் முக்கிய பண்டிகைகள் அணிவகுத்து வருகின்றன.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள குல்தாபாத்தில் அமைந்துள்ள முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த கல்லறையை அகற்றக்கோரி நாக்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் இஸ்லாமியர்களின் புனித போர்வை எரிக்கப்பட்டதாக பரவிய வதந்தியால் கலவரம் வெடித்தது. குல்தாபாத்தில் ஔரங்கசீப்பின் கல்லறைக்கு போலீஸ் காவல் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் அடுத்த சில நாட்களில் முக்கிய பண்டிகைகள் அணிவகுத்து வருகின்றன. அதிலும் குறிப்பாக 29-ந் தேதி சத்ரபதி சம்பாஜியின் நினைவுநாள் வருகிறது. இதைத்தொடர்ந்து 30-ந் தேதி மராட்டிய புத்தாண்டான 'குடிபட்வா' விழாவும், 31-ந் தேதி ரம்ஜான் மற்றும் ஜூலேலால் ஜெயந்தி மற்றும் ஏப்ரல் 6-ந் தேதி ராம நவமி போன்ற விழாக்களும் வருகிறது.
மேற்கண்ட நாட்களில் இந்து அமைப்புகள் ஔரங்கசீப்பின் கல்லறைக்கு எதிராக போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக வெளியான தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
எனவே சத்ரபதி சம்பாஜிநகரில் அசம்பாவிதத்தை தவிர்க்கவும், சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 8-ந் தேதி வரை 144 தடை உத்தரவு விதித்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.