இந்தியா
பணம் சிக்கிய விவகாரம்: நீதிபதியை அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்ற முடிவு - வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம்

பணம் சிக்கிய விவகாரம்: நீதிபதியை அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்ற முடிவு - வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம்

Published On 2025-03-24 20:40 IST   |   Update On 2025-03-24 20:40:00 IST
  • ரூ.37 கோடி வரை பணம் இருந்து இருக்கலாம் என்றும் மற்றொரு தகவல் வெளியானது.
  • மார்ச் 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவார்கள்

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் யஷ்வந்த் வர்மா. கடந்த 16ம் தேதி ஹோலி பண்டிகையின் போது இவரது வீட்டின் ஒரு அறையில் தீப்பிடித்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் அவரது வீட்டுக்கு சென்று தீயை அணைத்தனர்.

இதையடுத்து தீ பரவிய இடங்களில் தீயணைப்புத் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது நீதிபதி வீட்டின் அருகே உள்ள ஒரு அறையில் பாதி எரிந்த நிலையில் 500 ருபாய் நோட்டுகள் ரூ.15 கோடி வரை பணம் இருந்ததாக தகவல் வெளியானது. எரிந்து நாசமாவதற்கு முன் ரூ.37 கோடி வரை பணம் இருந்து இருக்கலாம் என்றும் மற்றொரு தகவல் வெளியானது.

இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும் நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியில் இருந்து தாற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டார்.

தற்போது விசாரணை நடந்து வரும் நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மாவை மாற்ற சஞ்சீவ் கண்ணா தலைமையிலான உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

தற்போது தில்லி உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள யஷ்வந்த் வர்மா ஏற்கெனெவே 2021 வரை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியவர் ஆவார்.

தற்போதும் அவர் மீண்டும் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். வரும் மார்ச் 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவார்கள் என்று பார் குழு தலைவர் அனில் திவாரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News