இந்தியா

பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் இஃப்தார் விருந்து - புறக்கணிப்பதாக அறிவித்த முஸ்லீம் அமைப்பு

Published On 2025-03-23 07:48 IST   |   Update On 2025-03-23 07:50:00 IST
  • முதலமைச்சர் இல்லத்தில் நடைபெறும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு முஸ்லீம் அமைப்பிற்கு அழைப்பு.
  • நீங்கள் கூறிய உறுதிமொழிகளுக்கு எதிரானது.

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் விடுத்த இஃப்தார் அழைப்பை அம்மாநிலத்தின் பிரதான முஸ்லீம் அமைப்பு நிராகரித்துள்ளது. நிதிஷ் குமார் தலைமையிலான அரசு வக்பு வாரிய மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து முஸ்லீம் அமைப்பு இஃப்தார் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தது.

இமாரத் ஷரியா என்ற முஸ்லீம் அமைப்பு பீகார், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா முழுக்க ஆதரவாளர்களை கொண்டிருக்கிறது. இன்று (ஞாயிற்றுக் கிழமை) முதலமைச்சர் இல்லத்தில் நடைபெறும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இமாரத் ஷரியா அமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த அழைப்புக்கு பதிலளித்த இமாரத் ஷரியா, "மார்ச் 23ம் தேதி நடைபெறும் அரசு இஃப்தாரில் கலந்து கொள்ள வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முஸ்லீம்களின் பொருளாதார மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கிய நிலைக்கு தள்ளும் வக்பு வாரிய மசோதாவுக்கு நீங்கள் அளித்த ஆதரவை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது."

"சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் ஒரு மதச்சார்பற்ற (தர்ம-நிரபெக்ஷ்) ஆட்சியை உறுதியளித்து நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள். ஆனால் பாஜகவுடனான உங்கள் கூட்டணியும், அரசியலமைப்பிற்கு விரோதமான மற்றும் நியாயமற்ற ஒரு சட்டத்திற்கு உங்கள் ஆதரவும், நீங்கள் கூறிய உறுதிமொழிகளுக்கு எதிரானது," என தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News