
null
ரூ.122 கோடி வங்கி மோசடி வழக்கு: முக்கிய குற்றவாளிக்கு 'பிரைன் மேப்பிங்' சோதனை
- வங்கியின் செயல்பாடுகள் முடக்கப்பட்டது.
- முக்கிய குற்றவாளியான வங்கியின் பொது மேலாளர் ஹிதேஷ் மேத்தாவை கைது செய்தனர்.
மும்பை:
மும்பையை சேர்ந்த நியூ இந்தியா கூட்டுறவு வங்கியில் ரூ.122 கோடி மோசடி நடந்தது கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கியின் செயல்பாடுகள் முடக்கப்பட்டது. மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வங்கியின் பாதுகாப்பு பெட்டகங்களில் இருந்து பணத்தை எடுத்து கட்டுமான அதிபர், தொழில் அதிபர் உள்ளிட்டவர்களுக்கு கொடுத்த முக்கிய குற்றவாளியான வங்கியின் பொது மேலாளர் ஹிதேஷ் மேத்தாவை கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின்பேரில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள வங்கியின் முன்னாள் தலைவர் ஹிதேன் பானு, அவரது மனைவி கவுரி பானுவை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே முக்கிய குற்றவாளியான ஹிதேஷ் மேத்தாவுக்கு போலீசார் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொண்டனர் இந்த சோதனையில் போதுமான அளவு வழக்கு தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை.
இதையடுத்து போலீசார் அவருக்கு 'பிரைன் மேப்பிங்' சோதனை மேற்கொள்ள உள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "நாங்கள் ஹிதேஷ் மேத்தாவுக்கு 'பிரைன் மேப்பிங்' சோதனை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளோம். அதுதொடர்பான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஏற்கனவே அவருக்கு தடயவியல், உளவியல் சோதனைகள் மேற்கொள்ள கோர்ட்டு அனுமதி அளித்துவிட்டது" என்றார்.