தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது, தமிழர்களால் அல்ல - மகாராஷ்டிரா ஆளுநர்
- இன்றும் பிரிவினைவாத சக்திகள் தீவிரமாக செயல்படுகின்றன.
- பௌத்தமும் தமிழ்நாட்டில் பரவலாக பின்பற்றப்பட்டது.
மும்பை ஆளுநர் மாளிகையில் இங்கிலாந்து வாழ் இந்தியரான சச்சின் நந்தா எழுதிய 'ஹெட்கேவர் - வாழ்க்கை வரலாறு' என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, "பேரரசர் அசோகர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்திய துணை கண்டத்தை ஒன்றிணைத்தார். கலாசார ரீதியாகவும் பாரம்பரியமாகவும், இந்தியா எப்போதும் ஒரே நாடாகத்தான் இருந்தது. அந்நிய படையெடுப்பாளர்களால் இந்தியாவை பிரித்து அதை ஆள முடிந்தது. சில மாநிலங்களில் இன்றும் பிரிவினைவாத சக்திகள் தீவிரமாக செயல்படுகின்றன.
ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கே.பி. ஹெட்கேவர் முன்வைத்த ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு பற்றிய சிந்தனைகள் முன் எப்போதையும் விட தற்போது மிகவும் பொருத்தமானவையாகும். ஆர்.எஸ்.எஸ். தனது நீண்ட பயணத்தில் நூற்றுக்கணக்கான தேசபக்தர்களை உருவாக்கியது. அவர்கள் தன்னலமின்றி வாழ்ந்து தேசத்திற்காக இறந்தனர்.
சமண மதம் தோன்றியபோது, மூன்றில் இரண்டு பங்கு தமிழர்கள் அதைப் பின்பற்றினர். இன்று 40,000 தமிழ் சமணர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். சமண மதம் பரவியபோது, அது தானாகவே பரவியது. பௌத்தமும் தமிழ்நாட்டில் பரவலாக பின்பற்றப்பட்டது.
தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் அரசியல் ரீதியாக உருவாக்கப்பட்டது. எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கவில்லை. வரலாற்று ரீதியாக, தமிழ்நாடு சேர, சோழ, பாண்டிய, கொங்குநாடு எனப் பிரிக்கப்பட்டது - அவை தனித்தனி ராஜ்ஜியங்களாக இருந்தன. நாம் அதை மேலும் பிரித்துக் கொண்டே போனால், அது ஒரு டவுன் பேருந்தில் ஏறுவது போல, அங்கு நீங்கள் சென்றிடவும், திரும்பி வருவதற்கும் உங்கள் பாஸ்போர்ட்டை காண்பிக்க வேண்டும். அதுதான் அடிப்படை யதார்த்தம்," என்று தெரிவித்தார்.