4 பேருக்கு கத்திக்குத்து: பெங்களூருவில் சீரியல் கில்லர்களா? காவல் துறை மறுப்பு
- காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- இந்த சம்பவங்களில் ஒரு நபர் தான் ஈடுபாட்டார்.
பெங்களூருவை அடுத்த இந்திரா நகரில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைக்குள் நான்கு பேர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வெளியான தகவல்களில் பெங்களூருவில் சீரியல் கில்லர் வலம் வருவதாக கூறப்பட்டது. கொலை முயற்சி சம்பவங்கள் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், கத்திக்குத்து சம்பவங்களின் பின்னணியில் சீரியல் கில்லர் யாரும் இல்லை என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவங்களில் ஒரு நபர் தான் ஈடுபாட்டார் என்று அவர்கள் தெரிவித்தனர்.
துணை காவல் ஆணையர் தேவராஜா கடந்த 8-ம் தேதி நான்கு பேர் கத்தியால் குத்தப்பட்டதை உறுதிப்படுத்தினார். இந்த சம்பவத்தில் கொலை முயற்சி செய்த நபர் மதுபோதையில் குடும்பத்தினருடன் வாக்குவாதம் செய்ததாகவும், கோபத்தில் நான்கு பேரை கத்தியால் குத்தியதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தை செய்தவர் மீது சிறு சிறு திருட்டு வழக்குகள் போடப்பட்டு இருப்பதாகவும் போலீசார் உறுதிப்படுத்தினர். இந்திய சட்டங்கள் சீரியல் கில்லர்களுக்கென எந்த வரையறையும் குறிப்பிடவில்லை. பொதுப்படையில் ஒரு தனிநபர் இரண்டு அல்லது மூன்றுக்கும் மேற்பட்டோரை கொலை செய்தால் அவரை சீரியல் கில்லர் என்று குறிப்பிடப்படுகிறது.
பெங்களூரு கத்திக்குத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் அவர்களின் உடல்நிலை தற்போது ஆபத்தை கடந்துள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து இந்திராநகர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.