இந்தியா

ஜீரோ செக் பண்ணுங்க ராகுல்.. டெல்லி தேர்தலில் ஹாட்ரிக் பூஜ்யம் பெற்ற காங்கிரசை கலாய்த்த பாஜக எம்.பி

Published On 2025-02-11 12:05 IST   |   Update On 2025-02-11 12:05:00 IST
  • பெட்ரோல் பங்கில் ஜீரோ செக் செய்வதோடு ஒப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கிண்டல் அடித்தார்.
  • சாதி தெரியாதவர்கள், சாதிவாரி கணக்கெடுப்பு கேட்கிறார்கள் என ராகுலின் சாதி குறித்து அனுராக் தாக்கூர் முன்பொருமுறை விமர்சித்திருந்தார்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31 முதல் நடைபெற்று வருகிறது. இடையில் டெல்லி சட்டமன்றத் தேர்தலும் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்றது.

பிப்ரவரி 8 நடந்த வாக்கு எண்ணிக்கையில் பாஜக 48 இடங்களிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. இதன்படி 27 வருடங்கள் கழித்து பாஜக ஆட்சி அமைக்கிறது. தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கணிசமான வாக்குகள் பெற்றிருந்தாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

கடந்த 2014 மற்றும் 2020 ஆகிய தேர்தல்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து 3 ஆவது முறையாக காங்கிரஸ் பூஜ்யம் பெற்றுள்ளது. எனவே பெட்ரோல் பங்கில் ஜீரோ செக் செய்வதோடு ஒப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் புகைப்படத்துடன் மீம்கள் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் நேற்று [திங்கட்கிழமை] நடந்த பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டத்தின்போது, பாஜக எம்பி அனுராக் தாக்கூர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தார்.

அனுராக் தாக்கூர் ஒரு பேப்பரை காட்டி, ராகுல் காந்தியிடம் ஜீரோ செக் செய்ய கூறி கிண்டல் அடித்தார்.

12 லட்சம் வரை வருமானத்திற்கு வருமான வரி இருக்காது, பூஜ்ய வரி என்று குறிப்பிடும் காகிதத்துடன் பேசிய அனுராக் தாக்கூர், அந்த பூஜ்யத்தை செக் செய்யுமாறு ராகுல் காந்தியை கிண்டல் அடித்தார்.

ராகுல் காந்தியை நகர்ப்புற நக்சல் என கூறிய அனுராக் தாக்கூர் பூஜ்ஜியம் என்ற சாதனையை யாராவது செய்தார்கள் என்றால் அது ராகுல் காந்தியின் தலைமையில் உள்ள காங்கிரஸ் தான் என்று கூறினார்.

சாதி தெரியாதவர்கள், சாதிவாரி கணக்கெடுப்பு கேட்கிறார்கள் என ராகுலின் சாதி குறித்து அனுராக் தாக்கூர் முன்பொருமுறை விமர்சித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக 1998 ஆம் ஆண்டு ஷீலா தீட்சித் தலைமையில் டெல்லியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் 2013 வரை தொடர்ந்து 13 வருடங்கள் ஆட்சியில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News