கவிதை எழுதிய காங்கிரஸ் எம்.பி. மீது வழக்கு.. புத்தியை பயன்படுத்த குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பாடம்
- உருது கவிஞரும் காங்கிரஸ் எம்.பி.யுமான இம்ரான் பிரதாப்கர் மீது குஜராத் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
- படைப்பாற்றல் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு கவிதையைப் பதிவிட்டதற்காக உருது கவிஞரும் காங்கிரஸ் எம்.பி.யுமான இம்ரான் பிரதாப்கர் மீது குஜராத் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
இம்ரான் பதிவிட்ட கவிதை வெறுப்பு மற்றும் வன்முறை செய்தியைப் பரப்புவதாகக் கூறி, போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். வழக்கை ரத்து செய்ய கோரி இம்ரான் பிரதாப்கர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால் குஜராத் உயர்நீதிமன்றம் எஃப்ஐஆரை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இதைத்தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றம் சென்றார்.
இதன் மீதான விசாரணை தற்போது நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இம்ரானுக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜரானார். எதிர் தரப்பில் குஜராத் அரசு வழக்கறிஞர் ஆஜரானார்.
விசாரணையின்போது பேசிய நீதிபதிகள், குஜராத் காவல்துறையும் உயர் நீதிமன்றமும் இந்த உருது கவிதையின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டது. தயவுசெய்து உங்கள் புத்தியை பயன்படுத்துங்கள். இது ஒரு கவிதை மட்டுமே. எந்த சமூகத்திற்கும் எதிரானது அல்ல. "யாராவது வன்முறையில் ஈடுபட்டாலும் கூட, நாம் அதில் ஈடுபடுவதில்லை" என்பதே இந்தக் கவிதையின் செய்தி. படைப்பாற்றல் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து வழக்கு மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. எஃப்ஐஆரில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.