இந்தியா
null

புதினை மோடி கட்டிபிடித்தது தொடர்பாக எழுந்த விமர்சனத்துக்கு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

Published On 2024-08-24 02:47 GMT   |   Update On 2024-08-24 02:50 GMT
  • புதினை மோடி கட்டி பிடித்தது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காட்டமாக விமர்சித்திருந்தார்.
  • மக்கள் ஒருவரை ஒருவரை சந்திக்கும்போது அரவணைத்துக்கொள்கிறார்கள். இது எங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதி.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் ஜூலை 9 அன்று நடந்த 22 வது இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி ரஷியா சென்றிருந்தார். அப்போது மோடியை புதின் காட்டித் தழுவி வரவேற்றார்.

புதினை மோடி கட்டி பிடித்தது அப்போது விமர்சனத்துக்கு உள்ளாகியது. குறிப்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இதை காட்டமாக விமர்சித்திருந்தார்.

அவரது எக்ஸ் பதிவில், "இது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை சேர்ந்த தலைவர் ஒருவர் உலகின் கொடூரமான குற்றவாளியோடு மாஸ்கோவில் இன்று கட்டித் தழுவியுள்ளது அமைதிக்கான முயற்சிகள் மீது விழுந்த பெருத்த அடியாக உள்ளது' என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று உக்ரைன் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் மோடி நடத்திய சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்.

அப்போது, கடந்த மாதம் பிரதமர் மோடியின் மாஸ்கோ பயணம் குறித்து நீங்கள் பேசினீர்கள். இரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தது விமர்சனத்துக்கு உள்ளானது. ரஷ்யாவிலிருந்து அதிக அளவிலான கச்சா எண்ணெய் நாம் இறக்குமதி செய்கிறோம். உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு இந்தியா வெளிப்படையான கண்டனம் தெரிவிக்கவில்லை. அப்படியிருக்க இந்தியா ரஷியாவுக்கும் ஆதரவு தெரிவிக்காமல் அணிசேரா கொள்கையை பின்பற்றுகிறது என்று ஜெலென்ஸ்கியை நம்ப வைப்பதற்கு உங்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டதா? என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

மோடி புதின் சந்திப்பு குறித்து எழுந்த விமர்சனத்துக்கு பதில் அளித்த ஜெய்சங்கர் "மக்கள் ஒருவரை ஒருவரை சந்திக்கும்போது அரவணைத்துக்கொள்கிறார்கள். இது எங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதி. ஒருவேளை உங்களது கலாச்சாரத்தில் அவ்வாறு இல்லாமல் இருக்கலாம். நேற்று உக்ரைன் சென்ற பிரதமர் மோடி ஜெலன்ஸ்கியை கட்டி பிடித்ததையும் நான் பார்த்தேன். பல இடங்களில் பல தலைவர்களை பிரதமர் மோடி கட்டி அணைத்திருக்கிறார்" என்று கூறினார்.

Tags:    

Similar News