லாட்டரி மன்னனின் ஆண்டு வருவாய் ரூ.15 ஆயிரம் கோடி- அமலாக்கத்துறை அதிர்ச்சி
- கோவை மார்ட்டினுக்கு லாட்டரி மோசடி மூலம் அதிகப்படியான லாபம் கிடைத்து உள்ளது.
- பல்வேறு மாநிலங்களில் வினியோகஸ்தர்களை நியமித்து உள்ளார்.
புதுடெல்லி:
கோவையை பூர்வீகமாக கொண்ட லாட்டரி மன்னன் என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டின், லாட்டரி விற்பனையில் முறைகேடு செய்ததாக, மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த 2014-ம் ஆண்டு விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர். இதில் அவருக்கு லாட்டரி விற்பனை மூலம் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடிவரை வருமானம் கிடைப்பதாக தெரியவந்து உள்ளது.
இதுகுறித்து அமலாக்கப்பிரிவு உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மார்ட்டினுக்கு லாட்டரி மோசடி மூலம் அதிகப்படியான லாபம் கிடைத்து உள்ளது. இதனை அவர் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து உள்ளார். மேலும் கொச்சி, கொல்கத்தாவில் தனியார் நிறுவனங்களை தொடங்கி, அவற்றின் மூலம் லாட்டரி விற்பனை முறைகேடுகளில் ஈடுபட்டு வந்து உள்ளார்.
லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி வைத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதுதொடர்பாக அவருக்கு எதிராக 4 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
அதாவது கடந்த 2014-ம் ஆண்டு சி.பி.ஐ. ஒரு வழக்கும், கொல்கத்தா போலீசார் 2 வழக்குகளும் தாக்கல் செய்து நடவடிக்கை மேற்கொண்டது. தொடர்ந்து லாட்டரி முறைகேடு விற்பனை மூலம் அரசுக்கு ரூ.1500 கோடிஅளவில் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, மேகாலயா அரசு கடந்தாண்டு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
மார்ட்டினுக்கு சொந்தமாக உள்ள கோவை, சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு கணக்கில் வராத ரூ.12 கோடி ரூபாயை பறிமுதல் செய்து உள்ளனர். மேலும் துபாய், லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.6.4 கோடி மதிப்பில் பணத்தை முதலீடு செய்து உள்ளார் என்பதும் தெரியவந்து உள்ளது.
மார்ட்டின் லாட்டரி தொழிலில் முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததால் மேற்கு வங்கம், கேரளா, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசியல்கட்சிகள் மூலம் நெருக்கடி வரலாம் என்பதை மார்ட்டின் உணர்ந்திருந்தார். தொடர்ந்து அவர் மேற்கண்ட மாநிலங்களில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம்கோடி-கோடியாக பணத்தை வாரி இரைத்து உள்ளார்.
அதாவது கடந்த 2019-ம்ஆண்டு முதல் 2024-ம் ஆண்டுவரை மார்ட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ரூ.1368 கோடி வரை பணம் வழங்கியதற்கான ஆதாரங்களை அமலாக்கப்பிரிவு சேகரித்து உள்ளது.
மேற்கு வங்காளத்தில் மம்தா கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.1592 கோடியை வழங்கிய மார்ட்டின், தனக்கு சொந்தமான தனியார் நிறுவனம் மூலம் ரூ.542 கோடியை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஆந்திராவில் ஜெகன்மோகன் கட்சிக்கு ரூ.154 கோடி, பாஜகவுக்கு ரூ.100 கோடி, காங்கிரஸ் கட்சிக்கு ரூ.50 கோடி என்று தேர்தல் பத்திரங்கள் மூலம் மார்ட்டின் பணத்தை அள்ளி வீசியது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை மூலம் தெரிய வந்து உள்ளது.
நாடு தழுவிய அளவில் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவதற்காக மார்ட்டின் 350-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களை தொடங்கி உள்ளார். மேலும் பல்வேறு சிறப்பு வாகனங்களை பயன்படுத்தி விற்பனை முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தார். இதற்காக அவர் பல்வேறு மாநிலங்களில் வினியோகஸ்தர்களை நியமித்து உள்ளார். அவர்களில் பெரும்பாலானோர் மார்ட்டினுக்கு சொந்தக்காரர்கள் என்பது கண்டறியப்பட்டு உள்ளது.
மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியபோது கோடிக்கணக்கில் பரிசு அறிவிக்கப்பட்ட லாட்டரி சீட்டு அடங்கிய பண்டல்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்து உள்ளனர்.
மேலும் இந்திய அளவில் லாட்டரி விற்பனை மூலம் மார்ட்டினின் நிறுவனத்துக்கு ஆண்டுதோறும் ரூ.15 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து உள்ளது. இருப்பினும் அவர் குறைந்த அளவே வருவாய் கிடைத்ததாக கணக்கு காட்டி ஏமாற்றி வந்தது அமலாக்கப்பிரிவு விசாரணை மூலம் தெரியவந்து உள்ளது.
சிக்கிம் மாநில லட்டரி மூலம் பெரிய அளவில் பணம் சம்பாதித்து வந்த மார்ட்டினுக்கு மேற்குவங்காள மாநிலத்தில் இருந்து 90 சதவீதம் வருவாய் கிடைத்து உள்ளது. மேலும் கேரளா, பஞ்சாப், கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கும் லாட்டரி தொழிலை விரிவுபடுத்தி பில்லியன் கணக்கில் பணத்தை சம்பாதித்தது தொடர்பாக அமலாக்கபிரிவு அதிகாரிகள் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.