மகாராஷ்டிரத்தில் அரசியல் குழப்பம் நீடிப்பு- மேலும் 3 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஓட்டம்
- உத்தவ் தாக்கரே அரசு பங்களாவை காலி செய்தார். பாந்த்ராவில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு குடியேறினார்.
- 35 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை ஏக்நாத் ஷிண்டே துணை சபாநாயகருக்கு அனுப்பி வைத்து இருந்தார்.
கவுகாத்தி:
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளை கொண்ட மகா விகாஸ் அசாகி (எம்.வி.ஏ.) கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக இருக்கிறார்.
சமீபத்தில் நடந்த மேல்சபை எம்.பி. தேர்தல் மற்றும் எம்.எல்.சி. தேர்தல்களில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சிலர் பா.ஜனதாவுக்கு ஆதரவாக கட்சி மாறி ஓட்டு போட்டனர். இதனால் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக சிவசேனாவில் அதிருப்தி குழு உருவானது. அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திடீரென மாயமானார்கள்.
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜனதா ஆதரவு அளித்தது. இதனால் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா ஆட்சி நடைபெறும் குஜராத் மாநிலம் சூரத்துக்கு சென்றனர்.
அப்போது 14 சிவசேனா எம்.எல்.ஏ.க்களும், 7 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் அவருடன் இருப்பதாக அதிருப்தி குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அவர்களை சிவசேனா தலைவர்கள் சிலர் தொடர்பு கொண்டு சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதா ஆட்சி நடைபெறும் மற்றொரு மாநிலமான அசாமுக்கு சென்றார். கவுகாத்தியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர் ஆதரவாளர்களுடன் தஞ்சம் அடைந்துள்ளார்.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தனக்கு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் உள்பட 46 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.
இதனால் பெரும்பான்மையை இழந்து உத்தவ் தாக்கரே அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் சிவசேனா தலைவர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர். இதில் எந்த பலனும் ஏற்படவில்லை.
கூட்டணி அரசை காப்பாற்ற அதிருப்தி குழு தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல் மந்திரி பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேவுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சரத்பவார் யோசனை தெரிவித்தார். இதனை உத்தவ் தாக்கரேவும் ஏற்றுக்கொண்டார்.
இதை தொடர்ந்து அவர் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று அறிவித்தார். இதை தொடர்ந்து உத்தவ் தாக்கரே அரசு பங்களாவை காலி செய்தார். பாந்த்ராவில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு குடியேறினார்.
ஆனால் இதை ஏக்நாத் ஷிண்டே நிராகரித்தார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் இருந்து சிவசேனா விலக வேண்டும் என்றார்.
இதுதொடர்பாக ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-
மகா விகாஸ் கூட்டணி இயற்கைக்கு மாறானது. அதில் உள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மட்டும் தான் கூட்டணியில் பலன் அடைந்துள்ளனர். அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சியினர் கடந்த 2½ ஆண்டுகளாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மகா விகாஸ் கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேற வேண்டும். முதல் மந்திரி பதவியை நான் விரும்பவில்லை. மாநிலத்தின் நலன் கருதி இந்த முடிவை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான பிரதாப் சர்நாயக் கூறும்போது, "பா.ஜனாவுடனான கூட்டணியை சிவசேனா மீண்டும் புதுப்பிக்க வேண்டும். காங்கிரஸ் கூட்ட ணியில் இருந்து வெளியேற வேண்டும்" என்றார்.
இந்த நிலையில் மேலும் 3 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே பக்கம் சாய்ந்துள்ளனர். தீபக் கேசகர், மங்கேஷ் குதால்கர், சதா சர்வான்கர் ஆகியோர் இன்று காலை மும்பையில் இருந்து புறப்பட்டு கவுகாத்தி சென்றனர். அவர்கள் ஏக்நாத் ஷிண்டேயை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதன் மூலம் அவரது கை ஓங்கி உள்ளது.
35 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை ஏக்நாத் ஷிண்டே துணை சபாநாயகருக்கு அனுப்பி வைத்து இருந்தார். அதில் கட்சியின் தலைமை கொறடாவாக இருக்கும் சுனில் நீக்கப்பட்டு இருப்பதாகவும், புதிய கொறடாவாக பரத் கோகோவாலே நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சிவசேனா கட்சியில் மொத்தம் 55 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில் 36 எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே பக்கம் உள்ளனர். இதனால் மகாராஷ்டிர அரசியலில் குழப்பம் நீடிக்கிறது.
ஏக்நாத் ஷிண்டே இன்று காலை 11 மணியளவில் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கவுகாத்தியில் இருந்து மும்பைக்கு திரும்புவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதே போல் உத்தவ் தாக்கரேயும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்தடுத்த ஆலோசனையால் மகாராஷ்டிர அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.