இந்தியா

மகரவிளக்கு பூஜை: சபரிமலையில் தங்குவதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்படாது

Published On 2024-01-12 04:20 GMT   |   Update On 2024-01-12 04:20 GMT
  • ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு வசதிகள் மூலமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு வந்ததால் நெரிசல் ஏற்பட்டது.
  • கோவில் வளாகத்தில் பக்தர்கள் முகாமிட தடை விதிக்கப்பட மாட்டாது என்று தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்:

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

மண்டல பூஜை சீசனை போன்றே, தற்போதும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது. இதனால் பம்பை, மரக்கூட்டம், நடைப்பந்தல், பதினெட்டாம்படி, சன்னிதான பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு வசதிகள் மூலமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு வந்ததால் நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக வயதானவர்கள் மற்றும் சிறுவர்-சிறுமிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மகரவிளக்கு பூஜை தினத்தில் நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தேவசம் போர்டு எடுத்தது.

அதன்படி நேற்று முன்தினம் (10-ந்தேதி) முதல் உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சபரிமலைக்கு வருகின்றனர். இதனால் பக்தர்கள் வருகை குறைந்தது. இதன் காரணமாக கடந்த நாட்களில் இருந்ததைப்போன்று கூட்ட நெரிசல் இல்லாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வருகிற 15-ந்தேதி வரை உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் முன்பதிவு 16-ந்தேதி 50 ஆயிரம் பேருக்கும், 17 முதல் 20-ந்தேதி வரை தினமும் 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் உடனடியாக முன்பதிவு செய்து சன்னிதானத்துக்கு செல்வதற்காக 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நிலக்கல், பம்பை மற்றும் வண்டிப்பெரியாறு ஆகிய இடங்களில் உடனடி சாமி தரிசனத்துக்கான முன்பதிவு மையங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மகரவிளக்கு பூஜை தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் ஊர்வலம் பந்தளத்தில் இருந்து நாளை (13-ந்தேதி) புறப்படுகிறது. அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவாபரணங்கள் சபரிமலைக்கு கொண்டு வரப்படுகிறது.

மகரஜோதி தரிசனத்தை காண சபரிமலையில் பாண்டித்தாவளம், குடிநீர் தொட்டியின் முன்பகுதி, பொதுப்பணித்துறை அலுவலகத்தின் முன்பகுதி, பி.எஸ்.என்.எல். அலுவலகத்தின் வடக்கு பக்கம், கொப்பரைக்களம், சன்னிதானத்தின் திருமுற்றம், மாளிகைப்புரம் கோவிலின் சுற்றுப்பகுதிகள், அப்பாச்சிமேடு, அன்னதான மண்டபத்தின் முன்பகுதி உள்பட 10 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த இடங்களில் இருந்து பக்தர்கள் மகர ஜோதி தரிசனம் செய்யலாம். மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் கோவில் மற்றும் கோவில் வளாகத்தில் பக்தர்கள் முகாமிட தடை விதிக்கப்பட மாட்டாது என்று தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் தேவசம்போர்டு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் எந்த பக்தர்களையும் கட்டுப்படுத்த மாட்டார்கள் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

Tags:    

Similar News