இந்தியா

நீட் தேர்வை ரத்துசெய்வது நியாயமில்லை: சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு

Published On 2024-07-05 10:46 GMT   |   Update On 2024-07-05 10:46 GMT
  • மறு தேர்வுக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள் பலர் வழக்கு தொடர்ந்தனர்.
  • நீட் தேர்வு தொடர்பான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் 8-ம் தேதி விசாரணைக்கு வருகின்றன.

புதுடெல்லி:

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, கடந்த மே 5-ம் தேதி நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் கடந்த மாதம் 4-ம் தேதி வெளியிடப்பட்டது. வினாத்தாள் கசிவு, 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட சர்ச்சைகளால் மறு தேர்வுக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள் பலர் வழக்கு தொடர்ந்தனர்.

அதன்பேரில் மத்திய அரசுக்கும், தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமைக்கும் சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கிடையே, நிலுவையில் உள்ள நீட் தேர்வு தொடர்பான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் 8-ம் தேதி விசாரணைக்கு வருகின்றன. சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட 8-ம் தேதிக்கான வழக்கு பட்டியலில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு 26 நீட் தேர்வு மனுக்கள் விசாரணைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் தேர்வில் பெரிய அளவில் ரகசியத்தன்மை மீறப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், முழு தேர்வையும் ரத்துசெய்வது நியாயமானதாக இருக்காது. தேர்வை முற்றிலுமாக ரத்துசெய்வது, 2024-ம் ஆண்டு வினாத்தாளை எழுத முயன்ற லட்சக்கணக்கான நேர்மையான விண்ணப்பதாரர்களுக்கு "தீவிரமாக ஆபத்தை விளைவிக்கும்" என தெரிவித்துள்ளது.

மேலும் சதி, ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம் செய்தல், நம்பிக்கை மீறல் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக முழு விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News