இந்தியா (National)

பிறந்தநாள் கொண்டாட்டம், சவால் விட்டு ரெயில் மீது ஏறிய மாணவர் உயிரிழப்பு..!

Published On 2024-07-08 05:47 GMT   |   Update On 2024-07-08 05:47 GMT
  • ரெயில் நிலையத்திற்கு சென்று ‘கேக்’வாங்க சென்றிருந்த நண்பர்களுக்காக காத்து நின்றனர்.
  • ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள எடப்பள்ளி வாய்மேலி பகுதியை சேர்ந்த தம்பதி ஜோஸ் ஆண்டனி-சவுமியா. ஜோஸ் ஆண்டனி கண்ணாடி தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்தவர். அவரது மனைவி சவுமியா மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணிபுரிகிறார். இவர்களது ஒரே மகன் ஆண்டனி ஜோஸ்(வயது17).

இவர் கொச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க சென்றார். அப்போது நண்பர்களில் சிலர் பிறந்தநாள் கொண்டாட 'கேக்' வாங்க கடைக்கு சென்று விட்டார்கள்.

மற்றவர்கள் எடப்பள்ளி ரெயில் நிலையத்திற்கு சென்று 'கேக்'வாங்க சென்றிருந்த நண்பர்களுக்காக காத்து நின்றனர். அவர்களுடன் மாணவர் ஆண்டனி ஜோசும் ரெயில் நிலைய பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது நண்பர்கள் தங்களுக்குள் சில சவால்களை கூறி விளையாடியபடி இருந்தனர்.

அங்கு பெட்ரோலிய பொருட்களுடன் நின்ற சரக்கு ரெயிலின் அடிப்பகுதி வழியாக நண்பர்கள் சிலர் தண்டவாளத்தை கடந்து சென்றனர். அப்போது அவரது நண்பர்கள், சரக்கு ரெயிலின் டேங்கர் பெட்டியின் மேலே ஏறி வர முடியுமா? என்று ஆண்டனி ஜோசுக்கு சவால் விட்டனர். இதனையடுத்து நண்பர்கள் விட்ட சவாலுக்காக சரக்கு ரெயிலின் டேங்கர் மீது ஏறினார்.

ரெயில் பெட்டிக்கு மேல் மின்சார ரெயிலுக்கான உயர் அழுத்த மின்கம்பி செல்வதை ஆண்டனி ஜோஸ் கவனிக்காமல் ரெயிலின் மீது ஏறினார். இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். உயர் அழுத்த மின்சாரம் என்பதால் ஆண்டனி ஜோஸ் உடல் கருகியது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் அலறினார்கள். மேலும் உடல் கருகிக்கிடந்த ஆண்டனி ஜோசை பார்த்து கதறி துடித்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு ரெயில் நிலையத்தில் இருந்தவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் உடல்கருகிய ஆண்டனி ஜோசை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

85 சதவீதத்துக்கும் மேல் தீக்காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆண்டனி ஜோஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நண்பர்களின் விளையாட்டு வினையானது கொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News