இந்தியா

மோட்டார் சைக்கிளில் 'ரொமான்ஸ்' - இளம்பெண்களுக்கு ரூ.80000 அபராதம்

Published On 2024-03-28 12:07 IST   |   Update On 2024-03-28 13:16:00 IST
  • செலான்களையும் போலீசார் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
  • கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனர்கள் பலரும் பதிவிட்டதோடு, சமூக ஆர்வலர்களும் போலீசாருக்கு வலியுறுத்தினர்.

நொய்டா:

கடந்த 25-ந்தேதி ஹோலி கொண்டாட்டத்தின் போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்டவர்களும் ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை வீசினர்.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 2 இளம்பெண்கள் மோட்டார் சைக்கிளில் ரொமான்ஸ் செய்தபடி ஹோலி கொண்டாடியது தொடர்பான 3 வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

அதில் ஒரு வீடியோவில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை ஓட்டுகிறார். அதன் பின்புறத்தில் 2 இளம்பெண்கள் எதிர்எதிரே அமர்ந்து கொண்டு இந்தி பாடலுக்கு ஆபாச நடன அசைவுகளை அரங்கேற்றிய காட்சிகள் இடம்பெற்று இருந்தது.

மோட்டார் சைக்கிளை ஓட்டிய வாலிபரும், பின்னால் இருந்த 2 இளம்பெண்களும் ஹெல்மெட் அணியாத நிலையில் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதைப்பார்த்த பயனர்கள் பலரும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஸ்கூட்டர் ஓட்டிய வாலிபர் மற்றும் இளம்பெண்களுக்கு ரூ.33 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதுகுறித்த செலான்களையும் போலீசார் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிலையில் அவர்கள் மீது வெறும் அபராதம் விதித்தால் மட்டும் போதாது. கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனர்கள் பலரும் பதிவிட்டதோடு, சமூக ஆர்வலர்களும் போலீசாருக்கு வலியுறுத்தினர்.

இந்நிலையில் நொய்டாவின் செக்டார் 113 போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் அளித்த புகாரின் பேரில், வீடியோவில் இடம்பெற்ற வாலிபர் மற்றும் இளம்பெண்கள் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 279 (அலட்சியமாக வாகனம் ஓட்டி மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல்), 290 (பொதுமக்களுக்கு தொல்லைகள் ஏற்படுத்துதல்), 294 (பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல்), 336 மற்றும் 337 (மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லது காயத்தை ஏற்படுத்துதல்) மற்றும் மோட்டார் வாகன சட்ட விதிகள் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மேலும் ரூ.47 ஆயிரத்து 500 என மொத்தமாக ரூ.80 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக துணை போலீஸ் கமிஷனர் (போக்குவரத்து) அனில்குமார் யாதவ் தெரிவித்தார்.

Tags:    

Similar News