பாரிஸில் இருந்து 16,000 கி.மீ தொலைவில் நடக்கும் ஒலிம்பிக்ஸ் சர்ஃபிங் போட்டிகள்.. ஏன் தெரியுமா?
- ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஒன்றான சர்ஃபிங் எனப்படும் அலைச்சறுக்கு போட்டி குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
- கடைசியாக 68 வருடங்களுக்கு முன்பு 1956 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலேயே இவ்வாறு நடந்தது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நேற்று அதிகாலை ஒலிம்பிக் ஜோதி ஏற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முதல் நாளில் பல்வேறு பிரிவுகளில் நடந்த முதற்கட்ட போட்டிகளில் பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள் தங்களின் திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.
மொத்தமாக 32 விளையாட்டுகளைக் கொண்ட இந்த பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் 329 போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 117 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஒன்றான சர்ஃபிங் எனப்படும் அலைச்சறுக்கு போட்டி குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆதவாது பிரான்ஸ் பாலினீசிய தீவுகளில் ஒன்றான தஹிட்டி[Tahiti] தீவின் கடல் பகுதியில் சர்ஃபிங் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இது மற்ற ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடக்கும் பாரிஸ் நகரில் இருந்து சுமார் 15,715 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பதே இதில் உள்ள சுவாரஸ்யம். கடைசியாக 68 வருடங்களுக்கு முன்பு 1956 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் அரங்கில் இருந்து இவ்வளவு தொலைவில் ஸ்வீடனில் வைத்து குதிரையேற்ற போட்டிகள் போட்டிகள் நடத்தப்பட்டன.
அதன்பிறகு தற்போது 15,715 கிலோமீட்டர் தொலைவில் சர்ஃபிங் போட்டிகள் நடத்தப்படுகின்றன. பிரான்ஸ் முழுவதும் ஒலிம்பிக் போட்டிகளைப் பரப்பும் முகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. இந்நிலையில் தஹிட்டி தீவில் ஒலிம்பிக்ஸ் கொண்டாட்டங்கள் பாரம்பரிய முறைப்படி நடந்து வருகிறது. இந்த வருட ஒலிம்பிக்ஸ் சர்ஃபிங் போட்டிகளில் 24 வீரர்கள் மற்றும் 24 வீராங்கனைகள் என மொத்தம் 48 சர்ஃபர்கள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.