இந்தியா

தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல்- உமர் அப்துல்லாவுக்கு சொந்தமாக வீடு, நிலம், கார் இல்லை

Published On 2024-05-05 10:31 IST   |   Update On 2024-05-05 10:31:00 IST
  • கடந்த 15 ஆண்டுகளில் முதன்முறையாக பாராளுமன்ற தேர்தலில் உமர் அப்துல்லா போட்டியிடுகிறார்.
  • 2002 சட்டமன்றத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தனது முதல் சட்டசபை தேர்தலில் கந்தர்பால் தொகுதியில் தோல்வி அடைந்தார்.

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி துணைத் தலைவருமான உமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாரமுல்லா எம்.பி. தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு வருகிற 20-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

இந்த நிலையில் லட்சாதிபதியான உமர் அப்துல்லாவுக்கு சொந்தமாக வீடு, நிலம், வணிக கட்டிடம், கார் அல்லது வேறு எந்த அசையா சொத்துக்களும் இல்லை என்பது அவர் தாக்கல் செய்த வேட்புமனு பிரமாண பத்திரத்தில் இருந்து தெரிய வந்துள்ளது.

முன்னாள் எம்.எல்.ஏ.வாகவும், முன்னாள் எம்.பி.யாகவும் இருந்து வரும் ஓய்வூதியம் மட்டுமே அவரது வருமானம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009-14 வரை ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரியாக பணியாற்றிய உமர் அப்துல்லாவின் அசையும் சொத்து மதிப்பு ரூ.54.45 லட்சமாகும். அவரிடம் ரூ. 95 ஆயிரம் ரொக்கம் இருந்தது. வங்கிகளில் ரூ.23.48 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளதாகவும் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ள விவாகரத்து முடிவால் மனைவியை பிரிந்திருப்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அவரது வருமானம் 2019-20-ல் ரூ.7.92 லட்சம் 2020-21-ல் ரூ.11.73 லட்சம், 2021-22 ல் ரூ.10 லட்சம், 2022-23-ல் ரூ.19.39 லட்சம் மற்றும் 2023-24-ல் ரூ.13. 20 லட்சம் என்று பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளில் முதன்முறையாக பாராளுமன்ற தேர்தலில் உமர் அப்துல்லா போட்டியிடுகிறார். அவர் முதன்முதலில் 1998-ல் ஸ்ரீநகர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். 1999-ல் மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2002 சட்டமன்றத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தனது முதல் சட்டசபை தேர்தலில் கந்தர்பால் தொகுதியில் தோல்வி அடைந்தார். 2008-ல் சோனாவர் தொகுதியில் வெற்றி பெற்று முதல் மந்திரியானார். 2014-ல், 2 இடங்களில் போட்டியிட்டு சோனாவர் தொகுதியில் தனது சொந்த மண்ணில் தோல்வியடைந்தார், ஆனால் மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் உள்ள பீர்வா தொகுதியில் வெற்றி பெற்றார்.

Tags:    

Similar News