இந்தியா

குளிர்கால கூட்டத்தொடரிலேயே ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டம்

Published On 2024-12-09 19:18 IST   |   Update On 2024-12-09 19:18:00 IST
  • ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த குறைந்த பட்சம் ஆறு மசோதாக்களை திருத்தம் செய்ய வேண்டும்.
  • மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை.

இந்தியாவில் மக்களவை தேர்தலுடன் அனைத்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தி முடித்திட மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை முன்மொழிந்துள்ளது.

இதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இந்த குழு ஒரு நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான மசோதாவை இந்த கூட்டத் தொடரிலேயே பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த மசோதா மீது ஒருமித்த கருத்தை உருவாக்க மத்திய அரசு விரும்புகிறது. இந்த மசோதா மீதான விரிவான ஆலோசனைக்காக பராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு (Joint Parliamentary Committee) அனுப்ப வாய்ப்புள்ளது.

பாராளுமன்ற கூட்டுக்குழுவில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் இருப்பார்கள். அவர்கள் இது தொடர்பாக ஆலோசனை நடத்துவார்கள். இது தொடர்பான மற்ற பிரிதிநிதிகளும் கலந்து கொள்வார்கள். நாட்டின் அனைத்து மாநில சட்டமன்ற சபாநாயகர்களும் அழைக்கப்பட வாய்ப்புள்ளது. அனைத்து பொதுமக்களிடமும் இது தொடர்பாக கருத்துகள் கேட்கப்படும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த குறைந்த பட்சம் ஆறு மசோதாக்களை திருத்தம் செய்ய வேண்டும். இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இரு அவைகளிலும் கூட்டணி கட்சிகளுடன் மெஜாரிட்டி உள்ளது. ஆனால் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு உள்ளதா? என்பது கேள்விக்குறியானது.

245 இடங்களை கொண்ட மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 112 இடங்கள் உள்ளன. எதிர்க்கட்சிகளுக்கு 85 இடங்கள் உள்ளன. அரசுக்கு 164 வாக்குகள் தேவை.

மக்களவையில் 545 இடங்களில் 292 இடங்கள் உள்ளன. மூன்றில் இரண்டு பங்கிற்கு 364 வாக்குகள் தேவை. ஆனால் வாக்கு நடத்தப்படும் வீதம் மாறுபடும். அப்போதைய நிலையில் எவ்வளவு உறுப்பினர்கள் அவைக்குள் இருக்கிறார்களோ அந்த எண்ணிக்கைதான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

Tags:    

Similar News