நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசிய ராகுல் காந்தி மீது வழக்கு
- காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலக திறப்புவிழாவில் ராகுல் காந்தி பங்கேற்றார்.
- அப்போது பேசிய அவர், இந்திய அரசுக்கு எதிராகப் போராடி வருகிறோம் என தெரிவித்தார்.
புவனேஸ்வர்:
மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலக திறப்புவிழாவில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நாட்டில் உள்ள எல்லா நிறுவனங்களையும் தன்வசப்படுத்துகிறது. இதனால் நாங்கள் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக மட்டுமின்றி, இந்திய அரசுக்கு எதிராகவும் போராடி வருகிறோம் என தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. உள்நோக்கத்துடன் ராகுல் காந்தி பேசியுள்ளார் என பா.ஜ.க. விமர்சனம் செய்தது.
இதற்கிடையே, ஒடிசாவின் ஜர்சுகுடா மாவட்ட கலெக்டரிடம் ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள் அமைப்புகளின் உறுப்பினர்கள் மனு அளித்தனர்.
அந்த மனுவில், ராகுல் காந்தி தேச விரோத கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த கருத்துகள் இந்தியர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் உள்ளன. அவர்மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக ராகுல் காந்திக்கு எதிராக ஜர்சுகுடா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக கவுகாத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.