தாராவி குடிசைப்பகுதிக்கு திடீரென வருகை தந்த ராகுல் காந்தி
- குடிசைப்பகுதியில் உள்ள தோல் தொழில்கூடங்கள், கடைகளை ராகுல் காந்தி பார்வையிட்டார்.
- பொதுமக்களிடம் சில நிமிடங்கள் உரையாடிய ராகுல் காந்தி அங்கு இருந்து புறப்பட்டு சென்றார்.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியை அதானி நிறுவனம், மகாராஷ்டிரா அரசுடன் இணைந்து மேம்படுத்த உள்ளது. இதற்கான கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
தாராவியில் சிறு, குறு தொழில் கூடங்கள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழில்கூடங்களுக்கு தாராவியிலேயே இடம் ஒதுக்கப்படுமா அல்லது வெளிப்பகுதிக்கு மாற்றப்படுமா? என்ற சந்தேகம் நிலவி வருகிறது.
இந்தநிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று மும்பை வந்தார். பின்னர் அவர் பகல் 1.30 மணியளவில் திடீரென தாராவி குடிசைப்பகுதிக்கு வருகை தந்தார். தாராவி காலாகில்லா, சந்த் ரோகிதாஸ் மார்க் பகுதியில் குடிசைப்பகுதியில் உள்ள தோல் தொழில்கூடங்கள், கடைகளை ராகுல் காந்தி பார்வையிட்டார். அங்கு அவர் தோல் தொழில்கூட தொழிலாளர்கள், கடைக்காரர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் தோல் தொழில் குறித்தும், தாராவி மேம்பாட்டு திட்டத்தால் ஏற்படும் பாதிப்பு, பிரச்சனைகள் குறித்தும் அவர்களிடம் கேட்டறிந்தார். சுமார் 2 மணிநேரம் அவர் தோல் தொழிலாளர்கள், கடைக்காரர்களிடம் உரையாடினார்.
தோல் தொழிலாளர்கள், கடைக்காரர்களை சந்தித்து பேசிய பிறகு, அந்தப்பகுதியில் திரண்டு இருந்த பொதுமக்களிடம் சில நிமிடங்கள் உரையாடிய ராகுல் காந்தி அங்கு இருந்து புறப்பட்டு சென்றார். ராகுல் காந்தி வருகையையொட்டி நேற்று தாராவி டி-ஜங்ஷன் முதல் காலாகில்லா பகுதி வரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ராகுல் காந்தி சட்டசபை தேர்தலுக்கு முன் மும்பை வந்து இருந்தார். இந்தநிலையில் அவர் நேற்று மீண்டும் மும்பைக்கு வருகை தந்துள்ளார். மும்பையில் விரைவில் மாநகராட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் ராகுல் காந்தியின் மும்பை வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.