ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதி சீனாவோடு இருக்கிறது: யாரும் அதை பற்றி ஏன் பேசவில்லை?- உமர் அப்துல்லா கேள்வி
- கார்கில் போரின்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்க நமக்கு வாய்ப்பு கிடைத்தது.
- உங்களுக்கு விருப்பம் இருந்திருந்தால் அந்தப் பகுதியை மீண்டும் கொண்டு வந்து இருப்பீர்கள். ஆனால் உங்களை தடுத்தது எது?.
ஜம்மு- காஷ்மீர் மாநில சட்டமன்றத்தில் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா பேசியதாவது:-
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் பகுதியை திரும்பப் பெறுவோம் என சொல்கிறார். அவரை யார் தடுத்தது? அவ்வாறு திரும்பப் பெற வேண்டாம் என யாராவது சொன்னார்களா?
கார்கில் போரின்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்க நமக்கு வாய்ப்பு கிடைத்தது. ஏனென்றால் அப்போது பாகிஸ்தான் நம் மீது தாக்குதல் நடத்தியது. உங்களுக்கு விருப்பம் இருந்திருந்தால் அந்தப் பகுதியை மீண்டும் கொண்டு வந்து இருப்பீர்கள். ஆனால் உங்களை தடுத்தது எது?.
நீங்கள் ஜம்மு-காஷ்மீர் வரைபடத்தை பார்க்கும் போது, அதன் ஒரு பகுதி ஏற்கனவே சீனாவுடன் இருக்கிறது. ஆனால் நீங்கள் அதைப்பற்றி பேசுவது கிடையாது?.
பாஜக தலைமையிலான மத்திய அரசு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை திரும்பப் பெறும்போது, அவர்கள் தற்போது சீனா பகுதியில் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் பகுதியையும் திரும்பப் பெற வேண்டும். அப்படி செய்தால் நாங்கள் அவர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்போம்.
இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்தார்.