பாஜக ஐடி விங் தலைவர் அமித் மாளவியா மீது பாலியல் புகார்:
- பிரதமர் மோடி பதவியேற்று 24 மணி நேரத்துக்குள்ளாகவே இந்த உண்மை வெளிவந்துள்ளது.
- பாஜக அலுவலகங்களிலும் அவர் பெண்களிடம் அத்துமீறியுள்ளார்.
பாஜக ஐடி விங் தலைவரான அமித் மாளவியா மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க பாஜக பார்வையாளராக பணியாற்றினார். அப்போது, அம்மாநிலத்தில் உள்ள பல பெண்களை பாலியல் ரீதியாக அவர் துன்புறுத்தியுள்ளதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சாந்தனு சின்ஹா சமூக வலைத்தளங்களில் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஸ்ரீநாத், " பாஜகவிடம் நாங்கள் கோருவது பெண்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்பதுதான். பிரதமர் மோடி பதவியேற்று 24 மணி நேரத்துக்குள்ளாகவே இந்த உண்மை வெளிவந்துள்ளது. பாஜகவின் மிக முக்கிய பொறுப்பாளர் ஒருவர் மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 5 ஸ்டார் ஹோட்டல்களில் மட்டுமில்ல பாஜக அலுவலகங்களிலும் அவர் பெண்களிடம் அத்துமீறியுள்ளார். அமித் மாளவியாவை அவரது பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த பாலியல் குற்றசாட்டுகளை மறுத்துள்ள அமித் மாளவியா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சாந்தனு சின்ஹா மீது 10 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.
மேலும், தன்னை பற்றி அவதூறாக வெளியிட்ட சமூக வலைத்தள பதிவை அவர் நீக்க வேண்டும் என்று அமித் மாளவியா கோரியுள்ளார்.