இந்தியா

கடித்த பாம்பை 3 முறை திருப்பி கடித்து கொன்ற வாலிபர்

Published On 2024-07-05 04:45 GMT   |   Update On 2024-07-05 06:20 GMT
  • பாம்பு கடித்ததால் ஆவேசமடைந்த சந்தோஷ் லோகர் உடனே அந்த பாம்பை பிடித்து கடித்தார்.
  • சத்தம் கேட்டு சக தொழிலாளர்களும் அங்கு திரண்டனர்.

நவாடா:

பாம்பு கடித்து இறந்தவர்களை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கடித்த பாம்பை வாலிபர் ஒருவர் திருப்பி கடித்ததில் அந்த பாம்பு இறந்துள்ளது. இந்த வினோத சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

பீகார் மாநிலம் நவாடாவில் உள்ள ராஜவுலி வனப்பகுதியில் ரெயில்வே பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியில் ஜார்கண்ட் மாநிலம் லதேஹர் மாவட்டத்தில் உள்ள பாண்டுகா பகுதியை சேர்ந்த சந்தோஷ் லோகர் (வயது 35) என்ற வாலிபரும், அப்பகுதியை சேர்ந்த சில தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2-ந்தேதி இரவு சந்தோஷ் லோகர் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் வேலை முடிந்து அப்பகுதியில் உள்ள தங்களது முகாம்களுக்கு சென்று தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு பாம்பு சந்தோஷ் லோகரை கடித்தது. இதனால் திடுக்கிட்டு எழுந்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

பாம்பு கடித்ததால் ஆவேசமடைந்த சந்தோஷ் லோகர் உடனே அந்த பாம்பை பிடித்து கடித்தார். மூன்று முறை அவர் பாம்பை தொடர்ந்து கடித்ததால் அந்த பாம்பு இறந்துபோனது.

இதற்கிடையே சத்தம் கேட்டு சக தொழிலாளர்களும் அங்கு திரண்டனர். அவர்கள் பாம்பு கடிபட்ட சந்தோஷ் லோகரை அருகே உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர் சதீஷ் சந்திரசிங்கா சிகிச்சை அளித்தார். தீவிர சிகிச்சைக்கு பின் சந்தோஷ் லோகர் வீடு திரும்பி உள்ளார்.

பாம்பு கடித்தால், கடித்த பாம்பை திருப்பி 3 முறை கடிக்க வேண்டும் என்று தங்களது கிராமத்தினர் கூறுவதாகவும், அதன்படியே பாம்பை கடித்ததாகவும் சந்தோஷ் லோகர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News