மக்களவையை மாநகராட்சி கூட்டமாக மாற்றாதீர்கள் - சபாநாயகர் ஓம் பிர்லா
- மேற்கு வங்காள அரசு ஊழியர்களின் உண்ணாவிரத போராட்ட விவகாரத்தை பா.ஜ.க. எம்.பி. எழுப்பினார்.
- மக்களவையை மாநகராட்சி கூட்டமாக மாற்றாதீர்கள் என்று சபாநாயகர் ஓம் பிர்லா கடுமையாக சாடினார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பா.ஜ.க. எம்.பி. சவுமித்ரா கான், மேற்கு வங்காள அரசு ஊழியர்களின் உண்ணாவிரத போராட்ட விவகாரத்தை எழுப்பினார். அகவிலைப்படி விவகாரத்தில் அவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசால் நேரடியாக உதவ முடியுமா? என கேட்டார்.
இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தொடர்பாக அவையில் கேள்வி எழுப்பியதற்கு கண்டனம் தெரிவித்தார். இதனால் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இரு எம்.பி.க்களும் மாறி மாறி கடுமையான வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். இது சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தலையிட்ட ஓம் பிர்லா, உங்களுக்குள்ளே விவாதிக்க வேண்டாம். மக்களவையை ஒரு மாநகராட்சி கூட்டமாக மாற்றாதீர்கள் என சாடினார்.