ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு அழுகிய கோழிக்கறி சப்ளை: 700 கிலோ பறிமுதல்
- உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- உரிமையாளர் பாலையா உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், பிரகாஷ் நகரை சேர்ந்தவர் பாலையா (வயது 40). இவர் கோழிக்கறி கடை நடத்தி வந்தார்.
இவரது கடையில் இருந்து பல்வேறு முக்கிய நகரங்களுக்கு அழுகிய கோழிக்கறி விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பெயரில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் வடக்கு மண்டல அதிரடி போலீசார் பாலையா கடைக்கு சென்றனர். அப்போது கடையில் வைக்கப்பட்டிருந்த கோழிக்கறி துர்நாற்றம் வீசியதுடன் அழுகிய நிலையில் இருந்து நச்சுத் தண்ணீர் ஒழுகியபடி இருந்தது.
இதனைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். கடையில் இருந்த 700 கிலோ அழுகிய கோழிக்கறிகளை பறிமுதல் செய்தனர். கடையில் இருந்த கடை உரிமையாளர் பாலையா உட்பட 15 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பாலையா ஏற்கனவே ரசூல் புராவில் அழுகிய கோழிக்கறியை விற்பனை செய்ததால் கைதானவர் என்பது தெரியவந்தது.
ஜெயிலில் இருந்து வெளியே வந்த பாலையா தனது கடையை பிரகாஷ் நகருக்கு மாற்றியது தெரிய வந்தது.
பிரகாஷ் நகரில் இருந்து சென்னை, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு அழுகிய நிலையில் உள்ள கோழிக்கறியை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து கிலோ ரூ.30 முதல் 50-க்கு விற்பனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
சென்னையில் உள்ள சில மதுபான பார்கள், ஓட்டல்கள், சாலையோர கடைகள் பாஸ்ட் புட் சென்டர்களுக்கு அனுப்பி வைத்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.