ராஜஸ்தானில் காரை வழிமறித்து 3 பேரை கொடூரமாக தாக்கிய கும்பல்- ஒருவர் பலி
- போலீசார் காருக்குள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
- போலீசார் 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆல்வார்:
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் ராம்புரா கிராமத்தில் 3 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் அவர்கள் சென்ற காரை வழிமறித்தது.
பின்னர் அந்த கும்பல் காரில் பயணம் செய்த 3 பேரையும் உருட்டுகட்டையால் சரமாரியாக தாக்கியது. இந்த கொடூர தாக்குதலில் சிக்கிய 3 பேரும் வலியால் அலறி துடித்தனர். இருந்த போதிலும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினார்கள். இது பற்றி அறிந்ததும் போலீசார் விரைந்து சென்றனர்.சம்பவம் நடந்த இடம் வனப்பகுதி என்பதால் வனத்துறை அதிகாரிகளும் அங்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
உடனே போலீசார் காருக்குள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
அங்கு வாசிம் என்பவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். மற்ற 2 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எதற்காக அவர்கள் தாக்கப்பட்டார்கள் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.