குடும்ப தலைவர் ஒப்புதலுடன் ரூ.50 கட்டணம் செலுத்தி ஆதாரில் முகவரி மாற்றலாம்- புதிய வசதி அறிமுகம்
- ரேஷன்கார்டு, திருமண பதிவு சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றை இதற்கான சான்றாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- சான்று எதுவும் இல்லாவிட்டால், குடும்ப தலைவரின் சுய ஒப்புதல் பத்திரத்தை பூர்த்தி செய்து முகவரியில் திருத்தம் செய்யலாம்.
புதுடெல்லி:
யு.ஐ.டி.ஏ.ஐ. எனப்படும் மத்திய அரசின் தனித்துவ அடையாள எண் வழங்கும் ஆணையம், பொதுமக்களுக்கான ஆதார் விவரங்களை வழங்கி வருகிறது.
ஆதாரில் ஏற்கனவே இருப்பிட சான்று ஆவண வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது குடும்பத் தலைவர் முறை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
அதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் குடும்பத் தலைவராக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த முறையில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினரின் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை தாங்களாகவே மாற்றிக் கொள்வதற்கு அல்லது திருத்தம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இதற்கு சம்பந்தப்பட்ட குடும்பத்தின் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். https://myaadhaar.uidai.gov.in// என்ற இணையதளத்தில் சென்று இந்த திருத்தங்களை மேற்கொள்ளலாம். குடும்ப தலைவரின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் ரகசிய குறியீட்டு எண்ணை பதிவு செய்து இந்த நடவடிக்கையை தொடங்கலாம்.
குடும்ப தலைவருக்கும், முகவரியில் மாற்றம் அல்லது திருத்தம் மேற்கொள்ள விரும்பும் குடும்ப உறுப்பினர்களுக்கும் உள்ள உறவுமுறைக்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பாக ரேஷன்கார்டு, திருமண பதிவு சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றை இதற்கான சான்றாக பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்று எதுவும் இல்லாவிட்டால், குடும்ப தலைவரின் சுய ஒப்புதல் பத்திரத்தை பூர்த்தி செய்து முகவரியில் திருத்தம் செய்யலாம்.
இந்த சேவைக்கு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் செலுத்திய பிறகு குடும்ப தலைவருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும்.
எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்ட 30 நாட்களுக்குள் இணையதளத்தில் குடும்ப தலைவர் தமது ஒப்புதலை தெரிவிக்க வேண்டும். அதன் மூலம் குடும்பத் தலைவரின் சம்மதத்தோடு மற்ற உறுப்பினர்கள் ஆன்லைனில் ஆதாரில் முகவரி மாற்றம் செய்யலாம்.