இந்தியா

மகனின் உடலில் தந்தையின் ஆவி - கொலையாளிகளை பிடிக்க போலீசின் பலே ஐடியா

Published On 2024-06-25 07:58 IST   |   Update On 2024-06-25 07:58:00 IST
  • சிறுவன் தனது தந்தையின் குரலில் பேச தொடங்கினான்.
  • சம்பவத்திற்கு பின் குற்ற புலனாய்வு சம்பவங்கள் மந்திரவாதத்தின் மூலம் நடத்தப்படுவது முடிவுக்கு வந்தது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் சிறைத்துறை டி.ஜி.பி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அலெக்சாண்டர் ஜேக்கப். இவர் கேரள போலீஸ் துறையில் பணியில் இருந்த போது நடந்த ருசிகர சம்பவங்களை சமூக வலைத்தளம் மூலமாக பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் 1988-ம் ஆண்டு காலகட்டத்தில் கண்ணூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த போது நடந்த சம்பவம் குறித்து கூறியிருப்பதாவது:-

கண்ணூர் மாவட்டம் தளிப்பரம்பில் மளிகை கடை நடத்தி வந்த வியாபாரி ஒருவர் இரவு 9 மணியளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். அவரை வழியில் மர்ம ஆசாமிகள் வெட்டி கொன்று விட்டு அவரிடம் இருந்த ரூ.9,500 ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இந்த படுகொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். அன்றைய கால கட்டத்தில் கண்காணிப்பு கேமரா, செல்போன் போன்ற எந்தவித நவீன வசதியும் இல்லாததால் கொலை நடந்து 10 தினங்கள் ஆகியும் கொலையாளிகள் பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனால் போலீசாருக்கு நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்து வந்தது.

அப்போது என்னுடன் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய கோபிநாத மேனன் என்னிடம் வந்து, 'முண்டக்காயத்தில் இறந்தவரின் ஆவியை வரவழைத்து கொலையாளிகள் பற்றிய விவரங்களை கூறும் முஸ்லிம் மந்திரவாதிகள் 3 பேர் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் இறந்த நபரை வரவழைத்து கேட்டால் உண்மை தெரிந்து விடும்' என்றார்.


இதையடுத்து நாங்கள் அந்த மந்திரவாதிகளை சந்தித்து அவர்கள் கூறியபடி பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தோம். அதன்படி, ஒரு நாள் நள்ளிரவில் இறந்தவரை அடக்கம் செய்த இடத்திற்கு அவரது மகனை அழைத்து சென்று கல்லறையை சுற்றி 3 முறை வலம் வர வைத்தோம். பின்னர் சிறுவனை வீட்டுக்கு அழைத்து வந்து அவனது தந்தை வழக்கமாக படுக்கும் கட்டிலில் படுக்க வைத்தோம். தொடர்ந்து பூஜைகள் தொடங்கியது.

ஒரு கட்டத்தில் திடீரென்று அந்த சிறுவன் மீது தந்தையின் ஆவி இறங்கியது. அந்த சிறுவன் தனது தந்தையின் குரலில் பேச தொடங்கினான். அருகில் இருந்த சிறுவனின் தாய், 'அய்யோ இது எனது கணவனின் குரல்' என கதறி அழ தொடங்கினார்.

அந்த சிறுவன் பேசிய போது, 'சம்பவத்தன்று இரவு நான் வீட்டுக்கு புறப்பட்ட போது 2 பேர் என்னை கொலை செய்து விட்டு என்னிடம் இருந்த ரூ.9,500 பணத்தை கொள்ளையடித்து சென்றனர். அவர்களில் ஒருவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் மற்றொரு நபர் இவர் தான்' என அடையாளத்தை கூறினார். தொடர்ந்து, அந்த ஆவி, 'பாதாளத்தில் இருந்து என்னை வரவழைத்து துன்பப்படுத்துகிறீர்களே' என கூறி அதிக சத்தத்துடன் கத்தியது. உடனே மந்திரவாத பூஜை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து சிறுவனிடம் இருந்து ஆவி வெளியேறியது. சிறுவன் வழக்கம் போல் சகஜமாக தனது தாயாருடன் பேச தொடங்கினான்.

இறந்தவரின் ஆவி கூறியபடி அன்று அதிகாலை 3 மணியளவில் கொலையாளிகளில் அடையாளம் கூறப்பட்ட ஒருவரை கைது செய்தோம். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் உடந்தையாக இருந்த மற்ற ஒருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி தண்டனை பெற்றுக்கொடுத்தோம்.

ஆவியை வரவழைத்து கொலையாளிகளை கண்டுபிடித்த விவரத்தை வழக்கு விசாரணை அறிக்கையில் எழுத முடியாது. ஆதலால் வழக்கு விசாரணையை வேறு விதமாக பதிவு செய்து விசாரணை நிறைவு செய்யப்பட்டது. வேறு யாராவது இது குறித்து கூறியிருந்தால், உண்மையாகவே நான் நம்பி இருக்க மாட்டேன். நேரடி அனுபவம் என்பதால் என்னால் அதை நம்பாமல் இருக்க முடியவில்லை.

பின்னாளில் இந்த விவகாரம் முஸ்லிம் ஜமாத்துக்கு தெரிய வர 3 முஸ்லிம் மந்திரவாதிகளும் ஜமாத் அமைப்பால் எச்சரிக்கப்பட்டனர். அந்த சம்பவத்திற்கு பின் குற்ற புலனாய்வு சம்பவங்கள் மந்திரவாதத்தின் மூலம் நடத்தப்படுவது முடிவுக்கு வந்தது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News