தெலுங்கானாவில் நாய்கள் துரத்தியதால் ஓடிய சிறுவன் டிராக்டரில் சிக்கி பலி
- தெருநாய்கள் கையில் வைத்திருந்த பிஸ்கட்டை பார்த்து, சிறுவனை துரத்தியது.
- விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், கமலாபூர் மண்டலத்திற்கு உட்பட்ட மாரிப்பள்ளிகுடம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால்.
இவரது மகன் தனுஷ் (வயது 11). சிறுவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
தெலுங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் முடிவடைந்தது. இதன் நிறைவு விழாவையொட்டி பள்ளியில் கல்வி தினப் பேரணி நடத்தப்பட்டது. இதில் கலந்துகொள்ள தனுஷ் சென்றான். பேரணி முடிந்த பிறகு அங்குள்ள பேக்கரியில் பிஸ்கட் பாக்கெட் வாங்கிக் கொண்டு சாலையில் நடந்து சென்றான்.
தெருநாய்கள் கையில் வைத்திருந்த பிஸ்கட்டை பார்த்து, சிறுவனை துரத்தியது. இதனால் அச்சமடைந்த தனுஷ் சாலையில் வேகமாக ஓடினான்.
அப்போது எதிர் திசையில் வந்த டிராக்டர் சிறுவன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தனுஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.
இதுகுறித்து தகவல் அறிந்த கமலாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாரங்கல் எம்.ஜி.எம். ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.