இந்தியா

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு

Published On 2022-10-02 15:59 IST   |   Update On 2022-10-02 15:59:00 IST
  • கடந்த 22-ம் தேதி என்.ஐ.ஏ. அதிகாரிகளும் அமலாக்கத்துறையினரும் அதிரடி சோதனை நடத்தினர்.
  • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீது புகார்கள் எழுந்தன. இதனையடுத்து தேசிய புலனாய்வு முகமையும் அமலாக்கத்துறையும் அந்த அமைப்பை கண்காணித்தன.

இதில் புகார்கள் உறுதியானதை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில், கடந்த 22-ம் தேதி என்.ஐ.ஏ. அதிகாரிகளும் அமலாக்கத்துறையினரும் அதிரடி சோதனை நடத்தினர். அந்த அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பலரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது. இதனை தொடர்ந்து அந்த அமைப்பின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டது.

இதற்கிடையில் அந்த அலுவலகங்களில் மீட்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க (ஆர்.எஸ்.எஸ்.) மற்றும் இந்து தலைவர்களுக்கு ஆபத்து இருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்புகள் தெரிவித்தன.

இது தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ், தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை முடிவு செய்தது.

அதன்படி கேரளாவில் உள்ள 5 ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News