3-வதாக பிறக்கும் பெண் குழந்தைக்கு ரூ. 50,000 FD, ஆண் குழந்தைக்கு பசு மாடு - தெலுங்கு தேசம் எம்.பி.
- பசு மாடு மற்றும் கன்றுக்குட்டி வழங்கப்படும்.
- வைப்பு தொகை ரூ. 10 லட்சம் வரை அதிகரிக்கும்.
ஆந்திர பிரதேச மாநிலத்தின் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. கே அப்பல நாயுடு தனது தொகுதியில் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் குடும்பங்களுக்கு முக்கிய தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி ஒரு குடும்பத்தில் மூன்றாவதாக பிறக்கும் பெண் குழந்தைகள் பெயரில் வங்கிக் கணக்கில் ரூ. 50 ஆயிரம் வைப்பு நிதி வரவு வைக்கப்படும் என்றும் மூன்றாவதாக பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு பசு மாடு மற்றும் கன்றுக்குட்டி வழங்கப்படும் என்று எம்.பி. அப்பல நாயுடு தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில் விவியநகரம் தொகுதி எம்.பி.யான அப்பல நாயுடு இத்தகைய திட்டத்தை அறிவித்துள்ளார். இவ்வாறு செய்வதன் மூலம் பெண் குழந்தை தனது திருமண வயதை எட்டும் போது, வைப்பு தொகை ரூ. 10 லட்சம் வரை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய எம்.பி. அப்பல நாயுடு, "மூன்றாவது குழந்தை ஆண் என்றால் பசு மாடு மற்றும் கன்றுக்குட்டியும், பெண் குழந்தை என்றால், 50 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி வழங்கப்படும். இந்திய மக்கள் தொகை அதிகரிக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.
என் தாயார், சகோதரிகள், மனைவி மற்றும் மகள்கள் என தினந்தோரும் நான் சந்திக்கும் பெண்களால் ஊக்குவிக்கப்படு தான் இந்த முடிவுக்கு வந்ததாக எம்.பி. அப்பல நாயுடு தெரிவித்தார். மக்கள் தொகையை அதிகப்படுத்தும் இந்தத் திட்டம் குறித்து அவர் மகளிர் தினத்தை ஒட்டி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பேசிய அவர், சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஏற்றதாழ்வுகளை குறிப்பிட்டு, பெண்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டியது தற்போது கட்டாயமாகி உள்ளது என்று தெரிவித்தார்.