காதலனை தேடி பாகிஸ்தான் செல்ல முயன்ற இளம் பெண்- விமான நிலையத்தில் அதிகாரிகள் மடக்கினர்
- ரத்தன்புரா கிராமத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் நேற்று ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு வந்தார்.
- பெண்ணிடம் பாஸ்போர்ட்டு, விசா மற்றும் பயணம் செய்வதற்கான எந்தவித ஆவணங்களும் இல்லை.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சு என்ற இளம்பெண் தனது பேஸ்புக் காதலன் நஸ்ருல்லாவை தேடி பாகிஸ்தான் சென்றார். கணவர் மற்றும் 2 குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற அஞ்சு மதம் மாறி நஸ்ருல் லாவை திருமணம் செய்து கொண்டதாக பரப்பரப்பான தகவல் வெளியானது. இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வராதநிலையில் அதே ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மற்றொரு இளம் பெண் காதலனை தேடி பாகிஸ்தான் செல்ல முயன்ற சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டம் ரத்தன்புரா கிராமத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் நேற்று ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு வந்தார். பின்னர் அவர் டிக்கெட் கவுண்டருக்கு சென்று பாகிஸ்தான் செல்ல டிக்கெட் வேண்டும் என கேட்டார். இதைப்பார்த்து சந்தேகம் அடைந்த ஊழியர் இது பற்றி அங்கிருந்த விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறினார்.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். அந்த பெண்ணிடம் பாஸ்போர்ட்டு, விசா மற்றும் பயணம் செய்வதற்கான எந்தவித ஆவணங்களும் இல்லை.இது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகள் துருவி.துருவி விசாரணை நடத்தியதில் தனக்கு சொந்த ஊர் பாகிஸ்தான் என்றும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்து தனது அத்தை வீட்டில் தங்கி இருந்ததாகவும், தற்போது மீண்டும் பாகிஸ்தான் திரும்பி செல்வதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோரை அழைத்து விசாரித்த போது அவள் கூறியது அனைத்தும் பொய் என தெரிந்தது. பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள தனது காதலனை சந்திக்க அவர் அந்த நாட்டுக்கு செல்ல முயன்றது அம்பலமானது. உடனே விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பெண்ணை ஜெய்ப்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.