சித்ரவதை செய்த மனைவி - மாமியார்.. தற்கொலைக்கு முன் தொழிலதிபர் எடுத்த வீடியோவில் திடுக்
- ஏற்கனவே 90 நாட்கள் கடந்து விட்டது. இன்னும் 90 நாட்கள் தான் இருக்கிறது.
- என் பெற்றோரிடம் கேட்க முடியாது, ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே என்னால் கஷ்டப்படுகிறார்கள்
டெல்லியை சேர்ந்த ஓட்டல் தொழிலதிபர் புனித் குரானா (40). இவர் கடந்த டிசம்பர் 31 அன்று கல்யாண் விஹாரில் மாடல் டவுன் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் மாலை 4.18 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புனித்தின் மனைவி மனிகா பஹ்வா மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை மனரீதியாகச் சித்ரவதை செய்ததாகவும் இதுவே தற்கொலைக்குக் காரணம் என்றும் புனித் குடும்பம் குற்றம் சாட்டியுள்ளது.
இருவருக்கும் இடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இருவரும் சேர்ந்து பேக்கரி ஒன்றை நடத்தி வந்த நிலையில் அதை நிர்வகிப்பது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் புனித் குரானா தனது செல்போனில் 54 நிமிட வீடியோவை பதிவு செய்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பதிவு செய்த வீடியோவில் இரண்டரை நிமிட கிளிப் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. தனது மனைவி மற்றும் மாமியார்களால் மிகவும் சித்ரவதை செய்யப்பட்டதாக அதில் அவர் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "நான் எனது இறுதி வாக்குமூலத்தை பதிவு செய்கிறேன். என் மாமியார் மற்றும் என் மனைவியால் நான் மிகவும் சித்திரவதை செய்யப்பட்டதால் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். நாங்கள் ஏற்கனவே பரஸ்பர விவாகரத்துக்கான கோப்புகள் மற்றும் சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டுள்ளோம்.
நாங்கள் நீதிமன்றத்தை மதித்து அந்த நிபந்தனைகளை 180 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும். அதில் ஏற்கனவே 90 நாட்கள் கடந்து விட்டது. இன்னும் 90 நாட்கள் தான் இருக்கிறது.
ஆனால் எனது மாமியார் மற்றும் மனைவி புதிய நிபந்தனைகளுடன் என்னை வற்புறுத்துகிறார்கள். அவர்கள் இன்னும் 10 லட்சம் ரூபாய் கேட்கிறார்கள், என் பெற்றோரிடம் கேட்க முடியாது, ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே என்னால் கஷ்டப்படுகிறார்கள் " என்று தெரிவித்துள்ளார்.
குரானாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரின் போனை கைப்பற்றி தடயவியல் சோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே குரானா மற்றும் அவரது மனைவிக்கு இடையே பிஸ்னஸ் தொடர்பாக சமீபத்தில் நடத்த வாக்குவதம் குறித்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது.