உத்தரகாண்டில் குளிரூக்காக மூட்டிய தீ- புகையால் மூச்சுத்திணறி உயிரிழந்த தம்பதி
- சந்தேகமடைந்த மக்கள் கதவை உடைத்துச் சென்று பார்த்தனர்.
- போலீசாருக்கு தெரிவிக்காமல் தம்பதியின் உடலை தகனம் செய்ததாக கூறப்படுகிறது.
உத்தரகாண்ட்:
கடும் குளிர் காரணமாக மூட்டிய நெருப்பில் மூச்சுத்திணறி தம்பதியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் பிலங்கானா பகுதியின் த்வாரி தப்லா கிராமத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதன் மோகன் செம்வால் (52) மற்றும் அவரது மனைவி யசோதா தேவி (48) ஆகியோர் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள த்வாரி தப்லாவிற்கு வந்திருந்தனர். அப்போது இரவு 11 மணியளவில் கடும் குளிர் காரணமாக நெருப்பை மூட்டி அதனை அறைக்குள் வைத்து கதவை சாத்திக்கொண்டனர். நெருப்பிடம் இருந்து வெளியேறிய புகையால் தூக்கத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.
மறுநாள் காலை அவர்களது மகன் அவர்களை எழுப்ப கதவை தட்டும் போது எந்த பதிலும் இல்லை. இதனால் சந்தேகமடைந்து கதவை உடைத்துச் சென்று பார்த்தனர். அப்போது அந்த தம்பதி படுக்கையில் இறந்து கிடந்தனர். இதையடுத்து போலீசாருக்கு தெரிவிக்காமல் தம்பதியின் உடலை தகனம் செய்ததாக கூறப்படுகிறது.