ஆமா.. யார் இந்த நரேந்திர மோடி?.. அப்படி எதுவும் கிடையாது - ஜார்கண்ட் பிரசாரத்தில் லாலு பிரசாத் கலாய்!
- ஜார்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.
- இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா [ஜெ.எம்.எம்] கட்சி ஆட்சியில் உள்ளது.
கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணியை எதிர்க்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சேர்ந்து இந்தியா கூட்டணியை உருவாகின. இதில் தமிழகத்தில் திமுக, உ.பி.யில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, மகாராஷ்டிராவில் சரத் பவார் என்சிபி, உத்தவ் தாக்கரே சிவசேனா, பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இதில் அங்கம் வகிக்கின்றன.
இந்த கூட்டணி மக்களவை தேர்தலில் ஆட்சியை பிடிக்கவில்லை என்றாலும் என்சிஏ கூட்டணியை திணறடிக்கும் அளவுக்கு கணிசமான வெற்றியை பதிவு செய்தது. இதனால் தனிப்பெரும்பான்மை இழந்த பாஜக ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளை சார்ந்திருக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது. மக்களவை தேர்தலுக்கு பின்னும் தொடரும் இந்தியா கூட்டணி சார்பில் உமர் அப்துல்லாவின் தேசியவாத காங்கிரஸ் காஷ்மீரில் ஆட்சியைப் பிடித்தது.
இந்நிலையில் தற்போது மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. 288 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 81 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.
இரண்டு மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள், கூட்டணியின் தேசிய தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஹேம்நாத் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா [ஜெ.எம்.எம்] கட்சி ஆட்சியில் உள்ளது.
தற்போது வங்கதேச ஊடுருவல், அதிகரிக்கும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தனது அஸ்திரங்களை பயன்படுத்தி பாஜக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது. பழங்குடியின அடையாளம் என்பதை முன்னிறுத்தி ஹேமந்த் சோரன் பிரச்சாரம் செய்கிறார்.
இந்நிலையில் பீகாரில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் ;லாலு பிரசாத் யாதவ் ஜார்கண்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். சாத்ரா [Chatra] தொகுதியில் நிற்கும் தனது கோதர்மா [Koderma] பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் லாலு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், இந்தியா கூட்டணி ஒன்றுபட்டுள்ளது. எல்லோருக்கும் இந்தியா கூட்டணியை தெரிந்துள்ளது. ஆனால் நரேந்திர மோடி என்று ஒன்றும் இல்லை, யார் நரேந்திர மோடி, பாஜகவை நீங்கள் தூக்கி எறிய வேண்டும் என்று பேசினார்.