- வெஸ்லி பள்ளியில் படிக்கும்போது திரு.வி.க.வுக்கு யாழ்ப்பாணம் சதாவதானம் நா. கதிரைவேல் பிள்ளையின் அறிமுகம் ஏற்பட்டது.
- திரு.வி.க.வின் இறுதிக் காலங்களில் அவருக்குப் பார்வையிழப்பு நேர்ந்தது.
திரு.வி.க. என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் அமரர் திரு.வி. கல்யாணசுந்தரனார் மிகச் சிறந்த தமிழறிஞர். சிறந்த எழுத்தாளர். மேடைப் பேச்சாளர். சிறந்த பத்திரிகையாளர்.
அவரது இனிய தமிழ்நடை காரணமாக `தமிழ்த் தென்றல்` என்று அழைக்கப்பட்டவர். கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பத்திரிகையுலக குரு திரு.வி.க. தான்.
கல்கி, திரு.வி.க.வை `ராயப்பேட்டை முனிவர்' என்றே மரியாதையுடன் குறிப்பிட்டார். தம் குருவைப் பற்றிக் கூறும்போது முனிபுங்கவர் என்று கல்கி சொல்வது வழக்கம். மறைமலையடிகள் இன்னும் ஒரு படி மேலே போனார். `திரு.வி.க.வை நாம் தெய்வமாகக் கொள்வோமாக!' என்கிறார் அவர்.
இப்படி மாபெரும் அறிஞர்களால் புகழ்ந்து கொண்டாடப்பட்ட திரு.வி.க.வின் மூன்று முக்கியமான பெருமைகள் என்ன தெரியுமா?
1. அவருக்குச் சொந்த வீடு கிடையாது. 2. அவர் செருப்புக் கூட அணியமாட்டார். 3. கதராடையையே உடுத்துவார்!
திருவாரூர் விருத்தாசலம் கலியாண சுந்தரனார் என்ற பெயரின் சுருக்கமே திரு.வி.க. என்பது! விருத்தாசலம் என்பது ஊரல்ல. அவரது தந்தையின் பெயர் அது.
1883 ஆகஸ்ட் 26- பிறந்த திரு.வி.க., 1953 செப்டம்பர் 17-ல் மறைந்தார். வாழ்ந்தது எழுபதே ஆண்டுகள். அதற்குள் எழுநூறு ஆண்டு வாழ்ந்தாலும் செய்ய முடியாத சாதனைகளைச் செய்தவர் அவர்.
தந்தை விருத்தாசலத்தின் முதல் மனைவி பச்சையம்மாள். அவள் இறந்தபின் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் தந்தை. இரண்டாம் மனைவி சின்னம்மாள். இரு மனைவியர் மூலமாகவும் விருத்தாசலத்திற்குப் பன்னிரண்டு குழந்தைகள் பிறந்தன. அந்தப் பன்னிருவரில் ஒருவர் திரு.வி.க.
திரு.வி.க. காந்தியம், பொதுவுடைமைத் தத்துவம் இரண்டிலும் ஈடுபாடு உடையவர். நாராயணன் என்ற திரு.வி.க. அன்பர் தன் மகளுக்குப் பெயர் சூட்டும்படித் திரு.வி.க.வை வேண்டியபோது அவர் வைத்த பெயர் `மார்க்சியா காந்தி!`. தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்தவர் திரு.வி.க.தான்.
ஆங்கிலம் அரசு மொழியாகக் கோலோச்சிய அக்காலத்திலேயே சென்னை மகாஜன சங்கக் கூட்டத்தில் `இனி எங்கும் எவரும் தமிழிலேயே பேச வேண்டும்` என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தவர். திலகர்தான் திரு.வி.க.வின் அரசியல் குரு.
தொடக்கத்தில் தந்தையிடமே கல்வி கற்றார். பின் இராயப்பேட்டையில் ஆரியன் தொடக்கப் பள்ளியிலும் வெஸ்லி பள்ளியிலும் படித்தார். உடல் நலக்குறைவால் படிப்பு தடைப்பட்டது...
வெஸ்லி பள்ளியில் படிக்கும்போது திரு.வி.க.வுக்கு யாழ்ப்பாணம் சதாவதானம் நா. கதிரைவேல் பிள்ளையின் அறிமுகம் ஏற்பட்டது. சின்னப் பிள்ளையான திரு.வி.க.வின் தமிழார்வத்தால் கதிரைவேல் பிள்ளை கவரப்பட்டார். அவரிடம் தனிப்பட்ட முறையில் தமிழ்க் கல்வி கற்கலானார் திரு.வி.க. கதிரைவேல் பிள்ளை காலமான பிறகு மயிலை தணிகாசல முதலியாரிடம் தமிழ் சைவப் பாடம் கேட்டார்.
பாம்பன் சுவாமிகளிடம் உபநிடதமும், அப்துல் கரீம் என்பவரிடம் குரானும் கற்றார். அன்னிபெசன்ட் அம்மையாரின் நட்புறவும் மறைமலை அடிகளாரின் தொடர்பும் இவரை அறிவில் சிறந்தோங்கச் செய்தன.
முதலில் கணக்கராகப் பணிபுரிந்து வந்தார். பின் திலகரின் சுதந்திரச் சிந்தனைகளால் கவரப்பட்டு வேலையை உதறினார். சுதந்திரப் போரில் தீவிரமாக ஈடுபடலானார்.
பின்னர் சென்னை இராயப்பேட்டையில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியரானார். பிறகு பதவி உயர்வு பெற்று, இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமை ஆசிரியராகவும் ஆனார். அதன் பின் பத்திரிகைகளில் பணியாற்றலானார். `தேசபக்தன்` பத்திரிகையில் இரண்டரை ஆண்டு பணிபுரிந்தார். பின் திராவிடன், நவசக்தி போன்ற இதழ்களில் ஆசிரியரானார். சுதந்திர எழுச்சியை ஊட்டக்கூடிய எழுத்துக்களை எழுதிக் குவித்தார். இருபது ஆண்டுகள் நவசக்தியை நடத்தினார். எழுத்துக்களால் தேசபக்திக் கனலை மூட்டினார். ஆனால் அவர் வாழ்வில் சிறை செல்லும் சந்தர்ப்பம் நேரவில்லை...
சென்னை வந்த காந்தியடிகள் திரு.வி.க.விடம் `நீங்கள் எந்த மொழிப் பத்திரிகையில் ஆசிரியராக இருக்கிறீர்கள்?` என்று கேட்டார். `தேசபக்தன் என்கிற தமிழ்ப் பத்திரிகை!` என்றார் திரு.வி.க. `அப்படியானால் நான் மேடையில் பேசும்போது என் ஆங்கிலப் பேச்சை நீங்கள் தமிழில் மொழிபெயருங்கள்!` எனப் பணித்தார் காந்தி.
காந்தி ஆங்கிலத்தில் பேசப் பேச உடனுக்குடன் வாக்கியம் வாக்கியமாகத் தமிழில் சரசரவென்று மொழிபெயர்க்கலானார் திரு.வி.க. அவரது மொழிபெயர்ப்பைக் கேட்டு மக்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தார்கள். காந்தி தமிழில் பேசினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்த அழகிய மொழிபெயர்ப்பு.
திரு.வி.க. `தமிழ்த் தென்றல்` என்று அழைக்கப்பட்டவர் அல்லவா? காந்தியின் ஆங்கிலம் திரு.வி.க.விடமிருந்து தமிழ்த் தென்றலாய்த் தவழ்ந்து வந்தது.
அவர் மொழிபெயர்ப்பு மக்களிடையே பெற்ற செல்வாக்கைப் பார்த்து மகிழ்ந்த மகாத்மா அதன்பின் திரு.வி.க.வை எப்போது சந்தித்தாலும் `என்ன மொழிபெயர்ப்பாளரே? நலமா?` என்றுதான் கேட்பாராம்... உறவினர்கள் திரு.வி.க.வின் துறவு ஆர்வத்தை மாற்றி கமலாம்பிகை என்ற பெண்ணை மணம் செய்து வைத்தார்கள். அன்பான மனைவி கிடைத்தும் திரு.வி.க.வின் இல்லற வாழ்வு சோபிக்கவில்லை. ஆணும் பெண்ணுமாக அடுத்தடுத்து குறுகிய கால இடைவெளியில் இரு குழந்தைகள் பிறந்து இறந்தன. ஆண் குழந்தை பிறந்த ஒரு வாரத்தில் கண்ணை மூடிவிட்டது. பெண் குழந்தை ஓராண்டு வரை மட்டுமே உயிர்வாழ்ந்தது.
திருப்பூர் கிருஷ்ணன்
அந்தச் சோகங்களைத் தாங்க இயலாமலோ என்னவோ மிகக் குறுகிய காலத்தில் மனைவியும் இறந்தார். மனைவி காலமானபோது திரு.வி.க.வுக்கு 35 வயதுதான். பலரும் வற்புறுத்திய போதும் மறுமணம் புரிந்துகொள்ள மறுத்துவிட்டார் அவர்...
திரு.வி.க. ஐம்பத்தாறு நூல்கள் எழுதிய மாபெரும் எழுத்தாளர். அவர் எழுதிய ஒவ்வொரு நூலும் முக்கியமானதுதான். தமது ஆசிரியரான நா. கதிரைவேல் பிள்ளையின் வாழ்க்கைச் சரித்திரத்தை எழுதியுள்ளார். `மனித வாழ்க்கையும் காந்தி அடிகளும், நாயன்மார் வரலாறு` போன்றவை அவர் நூல்களில் சில. `பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடல் திரட்டும் பத்திரகிரியார் புலம்பலும்` என்ற நூலைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். திருக்குறள் குறித்த அவர் நூல்களும் குறிப்பி டத்தக்கவை.
`தேசபக்தாமிர்தம், இந்தியாவும் விடுதலையும்` போன்ற அரசியல் நூல்கள், `முருகன் அல்லது அழகு, உள்ளொளி, இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம், நினைப்பவர் மனம், தியானம், ஆலமும் அமுதமும்` போன்ற சமய நூல்கள் என அவரது நூல்கள் பலதரப்பட்டவை.
`முருகன் அருள்வேட்டல், திருமால் அருள்வேட்டல், சிவன் அருள்வேட்டல், கிறிஸ்துவின் அருள்வேட்டல், பொருளும் அருளும் அல்லது மார்க்சியமும் காந்தியமும், முதுமை உளறல், படுக்கைப் பிதற்றல்` உள்ளிட்ட பல செய்யுள் நூல்களும் அவரது படைப்புகளே. `இலங்கைச் செலவு` என்ற பயண இலக்கிய நூல் பெரிதும் பேசப்பட்ட நூல்.
இளமை மணத்தைத் தீவிரமாக எதிர்த்தார். பெண்களின் மண வயதை உயர்த்தி சாரதா சட்டம் வந்ததும் அதை ஆதரித்துப் பத்திரிகையில் எழுதினார். சென்னை இராயப்பேட்டை மாதர் சங்கத்தைத் தொடங்கி வைத்தவர் அவர்தான்.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெண்கள் மாநாடு நடத்தியபோது அதில் இரண்டேகால் மணிநேரம் பெண்களின் முன்னேற்றம் குறித்து உரையாற்றினார். `பெண்ணின் பெருமை` என்பது திரு.வி.க.வின் புகழ்மிக்க ஒரு நூல். திரு.வி.க.வின் தாய் தொண்ணூறு வயது இருந்தார். மனைவியை இழந்த தன் மகன்மேல் அளவற்ற பாசம் கொண்டிருந்த அவர், தம் வாழ்நாளின் இறுதி நாள் வரை மகனைப் பேணிப் பராமரித்தார்.
திரு.வி.க.வின் இறுதிக் காலங்களில் அவருக்குப் பார்வையிழப்பு நேர்ந்தது. தானே கைப்பட நூல் எழுத இயலாத நிலை. அதனால் என்ன? தாம் எழுதவிரும்பிய நூல்களைச் சொல்லலானார்.
அவரது அன்பர்கள் அவர் சொல்லச் சொல்ல அவற்றை எழுதினார்கள். அப்படியும் சில நூல்கள் வெளியாயின. அப்படி அவர் சொல்லி நூல் எழுதியவர்களில் நாராயணசாமி என்ற நண்பரும் ஒருவர்...
திரு.வி.க.வின் மேல் பெருமதிப்புக் கொண்டிருந்த டாக்டர் மு.வரதராசன், திரு.வி.க காலமாவதற்குச் சிறிதுகாலம் முன்பு அவரைப் பார்க்க வந்தார். `இப்போது நாராயணசாமியிடம் என்ன நூல் சொல்லி வருகிறீர்கள்?` எனக் கேட்டார். பின்னர் அப்படிக் கேட்க நேர்ந்தது பற்றிப் பெரிதும் வருந்தினார்.
இனி திரு.வி.க.விடம். என்ன நூல் `சொல்லி` வருகிறீர்கள் என்று தானே கேட்க முடியும்? என்ன நூல் `எழுதி` வருகிறீர்கள் என்று கேட்க முடியாதே? மு.வ.வின் கேள்விக்கு `மரணம்` என்று பதில் சொன்னார் திரு.வி.க. இறுதிக் காலங்களில் `முதுமையின் உளறல்` என்றொரு நூலைச் சொல்லி எழுதினார். `மரணம்` என்ற தலைப்பில் தான் எழுதவிருந்த நூலை பின்னர் தலைப்பு மாற்றி `படுக்கைப் பிதற்றல்` என்று சொல்லி எழுதவைத்தார்.
ஈடு இணையற்ற தமிழ் அறிஞராகவும் ஒப்புயர்வற்ற ஆன்மிகவாதியாகவும் வாழ்ந்த திரு.வி. கல்யாண சுந்தரனார் தம் 71 வயதில் 1953 செப்டம்பர் 17இல் காலமானார். திரு.வி.க. மீது பெரும் மதிப்பு வைத்திருந்தவர்களில் பெரியார் ஈ.வெ. ராமசாமி நாயக்கரும் ஒருவர். பெரியார் உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்கள் மயானம் வரை ஊர்வலமாக வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
சென்னை மயிலாப்பூர் மயானத்தில் மக்கள் வெள்ளம் கட்டுக்கடங்காமல் திரண்டிருந்தது. சிரமப்பட்டுக் கூட்டத்தினரை விலக்கிக் கொண்டு வந்து சடலத்தைச் சிதையில் வைத்தார்கள். திரு.வி.க.வின் விருப்பப்படியே அவரது உடலுக்கு எந்தவிதச் சடங்கும் இன்றி எரியூட்டப்பட்டது. திரு.வி.க.வின் பெரிய தகப்பனார் மகன் பாலசுப்பிரமணியனும் திரு.வி.க.வின் விருப்பப்படியே டாக்டர் மு.வரதராசனும் தமிழறிஞர் அ.ச. ஞானசம்பந்தனும் அவரது உடலுக்கு எரியூட்டினார்கள்.
உண்மையில் திரு.வி.க. காலமாகவில்லை. தம் எண்ணற்ற நூல்களில் தமது அற்புதமான தமிழ் ஆன்மிகச் சிந்தனைகளோடு அவர் நிரந்தரமாய் வாழ்ந்து வருகிறார்.
தொடர்புக்கு,
thiruppurkrishnan@gmail.com